டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், தனக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிவித்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தனது 17 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை இந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பிரித்து வழங்கவுள்ளதாகவும், ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு அந்தச் சொத்துகள் கிடைக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பிரான்சின் 'லே பாயிண்ட்' (Le Point) பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் இந்தத் தகவலை பாவெல் துரோவ் வெளிப்படுத்தியுள்ளார். 40 வயதாகும் துரோவ், தனக்கு மூன்று மனைவிகளுக்கு ஆறு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தவிர, கடந்த 15 ஆண்டுகளாக அவர் விந்தணு தானம் செய்து வருவதாகவும், இதன் மூலம் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட கிளினிக் தனக்குத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
"எனது அனைத்து குழந்தைகளும் என்னுடைய $13.9 பில்லியன் சொத்துகளை பிரித்துக்கொள்வார்கள். டெலிகிராம் செயலியால் நான் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களால் அடுத்த முப்பது ஆண்டுக்கு என் குழந்தைகள் இந்த சொத்துகளை பிரித்துக்கொள்ள முடியாது. அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல வாழ்ந்து, தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கைச் சார்ந்திருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்." என்று துரோவ் உறுதியளித்துள்ளார்.
தனது உயிலில் இந்த விவரங்களைச் சேர்த்திருப்பதாகவும், தனது குழந்தைகள் உடனடியாக தனது சொத்துக்களை அணுக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் சாதாரணமாக வாழ வேண்டும், தாங்களாகவே வளர்ந்து, தங்களை நம்பி, எதையாவது உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வங்கி கணக்கைச் சார்ந்து வாழக் கூடாது" என்பதே தனது நோக்கம் என்று துரோவ் விளக்கியுள்ளார். தனது பணியில் உள்ள அபாயங்கள் காரணமாகவே இந்த முடிவுகளை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள நிலையில், துரோவின் இந்த வெளிப்படையான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது, பலரும் அவரது தனிப்பட்ட முடிவையும், அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.