
பொதுவாக, ஆன்மிகம் குறித்து அடிக்கடி மனதில் நமக்கு சில சந்தேகங்கள் எழுவது இயற்கைதான். அதுவும் இன்றைய கால இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு ஆன்மிகத்தைப் பற்றிய தெளிவு அதிகம் இருக்காது. அது குறித்து மனதில் ஏற்படும் சில ஆன்மிக சந்தேகங்களையும் பதில்களையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. வெற்றிலைப் பாக்கை பூஜை போன்ற சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் காரணம்?
‘பூகீபல ஸமாயுக்தம் நாகவல்யைர் தளைர்யுதம்’ என்று மந்திரம் சொல்லி பூஜையின் பொழுது வெற்றிலைப் பாக்கு தாம்பூலத்தை சமர்ப்பிப்பது வழக்கம். ‘பூகீபலம்’ என்றால் பாக்கு, நாகவல்லி தளை என்றால் வெற்றிலை. வெற்றிலையில் மகாலட்சுமி உள்ளிட்ட முப்பெரும் தேவியர் வாசம் செய்வதாகவும், பூஜையில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டிருந்தாலும் அதனைப் போக்கி பூஜையின் பூரண பலனை பெற்றுத் தருவதால் வெற்றிலையையும் பாக்கையும் பூஜை போன்ற சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறோம்.
2. பஞ்ச திருப்பதி தலங்கள் எவையெவை?
பாளையங்கோட்டை கோபாலசாமி கோயில், சீவலப்பேரி பெருமாள் கோயில், ராமர் கோயில், மேலப்பாட்டம் மற்றும் கீழப்பாட்டம் கோயில்கள் என இவை ஐந்தும்தான் பஞ்ச திருப்பதிகளாகும். ஒரே நாளில் இந்த ஐந்து கோயில்களையும் வணங்கி வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
3. ஈர ஆடையுடன் வழிபாடு செய்யலாமா?
ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, வழிபாடு செய்யும் நேரங்களில் உலர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதுதான் நல்லது. ஒருவேளை ஈர உடையுடன் வழிபாடு செய்ய வேண்டி இருந்தால் அதனை 'ஓம் அஸ்த்ராய பட்' என்று 7 முறை கூறி உதறிவிட்டு பின்பு அணிந்து கொள்ளலாம்.
4. வளர்பிறையில் செய்யும் வழிபாடுகள் குறித்து சொல்ல முடியுமா?
வளர்பிறையில் செய்யும் வழிபாடுகள் வளர்ச்சியைத் தரும். வளர்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, செல்வ செழிப்பு ஏற்படும், பண கஷ்டங்கள் நீங்கும். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியையை 'அட்சய திருதியை' என்பார்கள். இந்நாளில் செய்யப்படும் எந்த ஒரு சுப காரியமும் மேலும் மேலும் சிறந்து விளங்கும்.
5. தேய்பிறையில் செய்யும் வழிபாடுகள் பற்றி…
தேய்பிறையில், குறிப்பாக அஷ்டமியில் பைரவரை வணங்க பயம் மற்றும் எதிர்ப்புகள் நீங்கும். தேய்பிறை சஷ்டி திதிகளில் கடன் தொல்லைகள், செவ்வாய் தோஷம் நீங்க முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு. தேய்பிறை பிரதோஷத்தில் ஈசனை வழிபட கஷ்டங்கள், நோய்கள், கடன் தொல்லைகள் நீங்கும். தேய்பிறை தசமி திதியில் பயம் நீங்கவும், தீய சக்திகளைப் போக்கவும் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது. தேய்பிறையில் செய்யப்படும் வழிபாடுகள் எதிர்மறை சக்திகளை நீக்கி பிரச்னைகளை தீர்க்கும்.
6. அரைக்காசு அம்மனை வழிபடுவதன் சிறப்பு?
நகை, பணம் போன்ற முக்கியமான பொருட்களை எங்காவது வைத்துவிட்டு சில சமயம் தேடுவது வழக்கம். அரைக்காசு அம்மனிடம் தொலைந்த பொருட்கள் கிடைப்பதற்கு வேண்டிக்கொண்டு அரைக்காசம்மன் படத்தின் முன்பு சிறுகட்டி வெல்லம் வைத்து வேண்டிக்கொள்ள தொலைந்த பொருள் கிடைத்துவிடும். அரைக்காசு அம்மன் திருக்கோயில் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள
ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயம்தான் அரைக்காசு அம்மன் கோயில். சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் கிராமத்திலும் அரைக்காசு அம்மன் கோயில் உள்ளது.
7. பிரம்ம ரிஷி பட்டம் என்பது...
‘பிரம்ம ரிஷி’ பட்டம் என்பது ரிஷிகளில் மிக உயர்ந்த பதவியாகும். அதாவது ரிஷிகளுக்கெல்லாம் தலைமை ரிஷி. இது தவ வலிமையால் ரிஷிகளுக்கெல்லாம் ரிஷியாக விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமாகும். பிருகு, அத்ரி, அங்கரீசர், காச்யபர், விசுவாமித்ரர், வசிஷ்டர், சாண்டில்யர் ஆகிய ஏழு ரிஷிகள் மட்டுமே பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்கள்.
8. அகோரி என்பவர்கள் யார்?
அகோரிகள் என்பவர்கள் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நீண்ட முடிகளுடன் காட்சி தருவார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண் பூசி இருப்பார்கள். மதப் பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள். நாக சன்னியாசிகள் அல்லது நாகா பாபா என்று அழைக்கப்படுபவர்களும் இவர்கள்தான். ரிஷிகேஷ் அல்லது இமாலய மலையின் வனங்களில் இவர்கள் இருப்பார்கள். 12 வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள்.
9. பிரம்ம முகூர்த்தம் என்பது...
அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளான (4.30 - 6) நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளைதான். இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றி பெறுவது உறுதி.