

கடந்த ஜூன் மாதம் 241 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் போயிங் 747 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளிலிருந்து ரமேஷ் வெளியே நடந்து வந்த காட்சி அனைவரையும் அதிசயிக்க வைத்தது.
ஜூன் மாதம் நடந்த இந்த விபத்தில் இவருக்கு சில இருக்கைகள் தொலைவில் உட்கார்ந்திருந்த இவருடைய தம்பி உயிரிழந்து விட்டார்.
பிரிட்டனில் தனது வீட்டிற்கு திரும்பிய பிறகு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு காரணமாக தான் மிகவும் போராடி வருவதாகவும், தன்னுடைய மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் தன்னால் இயல்பாக பேச முடிவதில்லை என்று தெரிவித்திருக்கும் விஸ்வாஸ்குமார், தற்போது மன ஆலோசகர்களின் உதவியை பெற்று வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த விபத்தில் தான் மட்டும் உயிர் பிழைத்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விமான விபத்து தன்னுடைய குடும்பத்தில் மிக மோசமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விபத்தில் அவருடைய தம்பியை இழந்து விட்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யாரிடமும் பேச விருப்பமில்லை என்றும் மனதளவில் மிகவும் அவதிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது இந்திய பிரதமர் தன்னை சந்தித்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
விபத்தில் உயிரிழந்த பயணிகள் மற்றும் பணியாளர்களில் 169 இந்தியர்களும், பிரிட்டனைச் சேர்ந்த 52 பேரும் அடங்குவர். மேலும், விமானம் விழுந்தபோது தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரமேஷ் மற்றும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்குவது எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.