கேரளாவில் நடைபெற்ற ஹோர்டஸ் கலை மற்றும் இலக்கிய விழாவில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கலந்துக் கொண்டார் , இந்த விழாவில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் வருகை தந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் தமிழக அரசியல் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது , குறிப்பாக தமிழக அரசியலின் தற்போதைய நிலை , அரசியல் களம் , மக்களின் எதிர்பார்ப்பு பற்றியும் கேட்கப்பட்டது. த.வெ.க தலைவரும் நடிகர் விஜயைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன , அதற்கு கமல் அளித்த பதில்களை இங்கு பார்க்கலாம்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு , நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவர் திமுகவுக்கு நேரடியான அரசியல் போட்டியாக கருதும் நிலையில் , மநீம கட்சியின் முக்கிய போட்டியாளர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன்," விஜய் எனது எதிரியல்ல , பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிரி என்று அடையாளம் காட்டத் துணியும் எதிரியை விட, எனது எதிரியாக நான் கருதுபவர் மிகப் பெரியவர். அவர் தான் எனது நேரடி எதிரி, இதை சொல்ல நான் எந்த ஒரு தயக்கமும் படப்போவதும் இல்லை. நான் கொல்லப் போகிற பெரிய எதிரி, சாதிவெறிதான், அது தான் எனது மிகப்பெரிய எதிரி " என்று கூறினார்.
மேலும் கமல் " நான் இந்த இடத்தில் வன்முறை மிகுந்த கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். கொலை என்பதே கொடிய வன்முறை என்னும் போது சாதிவெறி அதை விட மிகவும் வன்முறையானது , மிகவும் கொடூரமானது கூட , அத்தகைய வன்முறையை நாம் சகித்துக் கொள்ளக் கூடாது. அதை மிகவும் வேகமாகவும் , உறுதியாகவும் நாம் கையாள வேண்டும்.
இந்த வன்முறையை வேரோடு ஒழிப்பது தான் என் அரசியல் இலக்கு. இந்த மண்ணில் சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என் நோக்கம். அதனால்தான், ஒரு மிகப் பெரிய எதிரியை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். என் அரசியல் பயணம் இந்தச் சாதிவெறியை ஒழிப்பதில்தான் இருக்கிறது" என்று கூறினார்.
அடுத்த கேள்வியாக விஜய் 2024 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். நீங்கள் 2018-ஆம் ஆண்டிலேயே கட்சி தொடங்கி அரசியலில் இறங்கியவர். உங்களின் அனுபவத்தை வைத்து , புதிதாக அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய்க்கு ஏதேனும் ஆலோசனைகள் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல் "நான் யாருக்கும் ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. ஏனென்றால் , எனக்கே சரியான நேரத்தில் ஆலோசனை எதுவும் கிடைக்கவில்லை. நான் இப்போதும் முதல்வர்களிடம் ஆலோசனைகள் கேட்டு வருகிறேன். அதனால், என் சகோதரர் விஜய்க்கு ஆலோசனை வழங்க இது சரியான தருணமாக இருக்காது. நம்மை விட மிகச் சிறந்த ஆசிரியர் 'அனுபவம்' மட்டுமே.
ஏனெனில், நாம் ஆலோசனை வழங்கினால், அதில் நமக்கென்று ஒரு சார்பு இருக்கும். ஆனால் , அனுபவத்திற்கு எந்தவிதமான சார்பும் இல்லை. அது எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் தானாகவே வந்து, நீங்கள் கற்றுக் கொள்ளத் தகுதியானதை உங்களுக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும். எனவே, விஜய் அவருடைய அனுபவத்தின் மூலமே அரசியலைக் கற்றுக்கொள்வதே சிறந்த வழி" என்று கூறினார்.