‘நான் தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம்தான்’ சந்திரபாபு நாயுடு விளக்கம்!

Chandrababu Naidu
Chandrababu Naiduhttps://english.varthabharati.in
Published on

‘நாங்கள் இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம்’ என்று ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டு உறுதி செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தான் செல்ல விருப்பதாக அவர் கூறி இருக்கிறார். இதன் மூலம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான பதவியேற்பு விழா வரும் 9ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 133 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இம்மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாம் அங்கம் வகிப்பது குறித்தான தனது நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார். அப்போது அவர், "எனக்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்டு இருக்கிறேன். இது போன்றதொரு தேர்தலை நான் பார்த்தது இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இன்னும் அங்கம் வகிக்கிறேன். அது மட்டுமின்றி, இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு செல்ல இருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கும் எனது நன்றிகள். தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கும் எனது நன்றி.

இதையும் படியுங்கள்:
மோடியை கைவிட்ட அயோத்தி ராமர்!
Chandrababu Naidu

மக்கள் சேவைக்காக அதிகாரத்துக்கு வரும்போது அந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

மத்தியில் ஆட்சியமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இதனையடுத்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைக்க பாஜக பெரும் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இண்டியா கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடுவை இழுக்க முயற்சி நடந்துவருவதாக பேச்சுக்கள் வெளியானது. இந்தநிலையில், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக கூறி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com