
போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். தனி நபர் அல்லது அரசு நிலங்களை இவ்வாறு விற்றதாக பலர் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்போம்.
தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் போலி ஆவணங்கள் மூலம் பல மோசடிகள் நாள்தோறும் நடந்து கொண்டே இருக்கின்றது. இதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புதுப்புது முறைகளில் மோசடிகள் நடந்து கொண்டே தான் உள்ளது.
ஆட்டை கடித்து... மாட்டை கடித்து... மனிதனை கடித்த கதை என்ற பழமொழிபோல் அங்கே இங்கே கைவரிசை காட்டியவர்கள் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தையே போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்றுள்ளனர். அந்த வகையில் 28 ஆண்டுகளுக்கு முன் போலி ஆவணங்கள் மூலம் விமானப்படை ஓடுதளத்தையே விற்ற தாய், மகன் நடத்திய மோசடி சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பட்டுவாலா கிராமம். பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளம் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட இந்த நிலம், சுதந்திரத்துக்கு பிறகு இந்திய விமானப்படையின் வசமானது. கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரின்போது அவசர தேவைக்காக இந்த ஓடுதளத்தை விமானப்படை அமைத்தது. அதைத்தொடர்ந்து 1965, 1971-ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடந்த போர்களில் இந்த விமான ஓடுதளம் முக்கிய விமானப்படை தளமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் ஒருபோதும் தனியார் உரிமைக்கு மாற்றப்படவில்லை.
இந்தநிலையில் டம்னிவாலா கிராமத்தை சேர்ந்த உஷா அன்சால், அவருடைய மகன் நவீன்சந்த் ஆகியோர் கடந்த 1997-ம் ஆண்டு, பட்டுவாலா விமானப்படை ஓடுதளத்தை போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்கு சொந்தமானதாக்கி உள்ளனர். இதற்கு வருவாய்த்துறையில் உள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்னர் அந்த நிலத்தை அவர்கள் இருவரும் சுர்ஜித் கவுர், மன்ஜித் கவுர், முக்தியால்சிங், ஜாகீர்சிங், தாராசிங், ரமேஷ் காந்த், ராகேஷ் காந்தி ஆகியோருக்கு பட்டா போட்டு விற்றுள்ளனர்.
28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மோசடியை ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷன்சிங் என்பவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக அவர் விமானப்படை அதிகாரிகள் மற்றும் பெராஸ்பூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தார். பின்னர் இது தொடர்பாக சண்டிகர் ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் உஷா அன்சால், அவருடைய மகன் நவீன்சந்த் ஆகியோர் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உஷா அன்சால், நவீன் சந்த் மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட அந்த நிலமும் மீட்கப்பட்டு, இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
"ராணுவ பயன்பாட்டிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிலம் மோசடியாக விற்கப்பட்டது, மேலும் தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மட்டுமே உண்மை வெளிப்பட்டது," என்று நிஷன்சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன, நீண்ட காலமாக மறைக்கப்பட்ட இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணும்பொருட்டு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கரண் சர்மா விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.