இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், அதன் விதிமுறைக்கு ஏற்ப தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ அதன் அதிரடி அறிவிப்பால் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கியில் பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை 10000 ரூபாய்க்குப் பதிலாக 50000 ரூபாயை இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விதிமுறை ஆகஸ்ட் 1-ம்தேதிக்கு பிறகு கணக்கு தொடங்குவோருக்கு மட்டுமே பொருந்தும் என வங்கி தெரிவித்திருந்தது.
அதேபோல், சிறு நகரங்களுக்கு ரூ.25,000 எனவும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 எனவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை அதிகரித்த ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச இருப்பை விட குறைவாக பணம் இருந்தால் 6 சதவீதம் அல்லது ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் வங்கி அறிவித்தது.
வங்கியின் இந்த அதிரடியான அறிவிப்பு வெளியாகி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தலையிடாது என்றும் கூறியுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரும் சேமிப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி விடலாமா என்றும் யோசித்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி திடீரென மினிமம் பேலன்ஸை குறைப்பதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் நகர்ப்புறத்தில் மினிமம் பேலன்ஸ் ரூ.50,000 என்பதை ரூ.15,0000ஆகவும், Semi-Urban மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரூ.25,000 ஆக உயர்த்திய மினிமம் பேலன்ஸை, தற்போது ரூ.7,500 ஆகவும் குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. அதுபோல் பழைய வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.5,000 என்பதை மாற்றம் செய்யவில்லை.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020-ம் ஆண்டில் மினிமம் பேலன்ஸ் விதியை முற்றிலுமாக ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெரும்பாலான பிற வங்கிகள் கணிசமாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்துள்ளது.