

தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், உலகளாவிய மற்றும் இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு (குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் போது), மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் போக்கு மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
ஒருபுறம் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் தங்கத்திற்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் நாடு முழுவதும் அதிகளவில் திருட்டு சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. கஷ்டப்பட்டு சிறுகசிறுக சேர்த்து வைத்து வாங்கிய தங்க நகையை திருடர்களிடம் இருந்து பாதுகாப்பது தற்போது மக்களுக்கு பெரும்பாடாகவே உள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இன்று(நவ.25) அதன் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திருடு போன நகையை காவல்துறை கண்டுபிடிக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என வழக்கை முடித்தால் அடுத்த 12 வாரங்களில் நகை மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.