

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது
திமுகவை வேரோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். தீய சக்தி திமுகவை தமிழகத்தில் அடியோடு வேரோடு அகற்ற வேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம்.. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது.. அதிமுக ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன..திமுக ஆட்சி அகற்றப்பட இன்னும் 3 அமாவாசை நாட்கள் தான் உள்ளன’ என்றார்.
திமுக அரசு மக்கள் வெறுப்பை சம்பாதித்துவிட்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் திமுக அரசு வாக்குறுதி காப்பாற்றவில்லை, முறையாக சம்பளமும் வழங்கவில்லை.. அதிமுக முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாள்களாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
"அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தோம். அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் சொன்னார்... ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்தார்.
பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி :
அதில், "அதிமுக ஆட்சி வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். பெண்களுக்கு தீபாவளி சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். மீன்பிடி தடைகால நிதி உயர்த்தி வழங்குவதோடு, மீனவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்" என கூறினார். 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு தற்போது வரை அறிவிக்காத நிலையில், புதிய தேர்தல் வாக்குறுதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 பொங்கலுக்கு பரிசாக வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.