புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமவளவனிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அப்போது ஒரு செய்தியாளர், ‘நீங்க திமுககாரர்’ என்று கூறி, அவரை விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற திருமாவளவன், ‘நான் திமுககாரனா?’ என்று கோபமாகக் கையை நீட்டி பேசினார். உடனே இன்னொரு செய்தியாளர், ‘என்ன கை நீட்டி பேசுறீங்க’ என்று கேட்டார். அதற்கு திருமாவளவன், ‘உங்க முன்னாடி கையை கட்டி பேச வேண்டுமா? கையை கட்டிக்கொண்டு நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து, திருமாவளவன் விளக்கம் அளித்து இருந்தார். அதில், ‘வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத் தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த செய்தியாளரின் கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. அதோடு, அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்’ என்று குறிப்பிட்டார்.
அதோடு, ‘என்னிடம் கேள்வி கேட்ட தொலைக்காட்சி அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு கண்டனம் என்கிற பெயரில், நமது தோழர்கள் யாரும் நாகரிக வரம்பு மீறல் செய்வது கூடாது. அது எவ்வகையிலும். ஏற்புடையதல்ல. நமது பெயரில் நாகரிகக் கேடர்கள் திட்டமிட்டு ஊடுருவி ஏதேனும் வரம்பு மீறிப் பேசவும், பொதுவெளியில் நமக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கிடவும் முனைவார்கள். அதற்கு நாம் இடம் தரக் கூடாது. எனவே, தோழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இதனைக் கடந்து செல்லவும்’ என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.