திருப்பத்தூர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 5-வது எஸ்பியாக ஷ்ரேயா குப்தா பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை அவர் நேற்று சந்திந்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு ஆகி, பிறகு தமிழகத்துக்கு வந்த பிறகு இங்குள்ள மக்கள் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தனர். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்திலும் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களுக்கு இனி இடம் இல்லை. மணல் மற்றும் மண் கடத்தல், குட்கா விற்பனை, கஞ்சா விற்பனை, சாராயம் ஆகியவை முழுமையாக கட்டுப்படுத்தப்படும். கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இயங்கும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் என்னுடைய தொலைபேசி எண் அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்தும், கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா விற்பனை இருந்தால் அது குறித்தும் எனக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் விரைவில் சரி செய்யப்படும். குறிப்பாக புதுப்பேட்டை சாலை முதல் தூய நெஞ்சக்கல்லூரி வரை ஏற்படும் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் செயல்படாத சிசிடிவி கேமிராக்கள் சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஷேர் ஆட்டோக்கள் ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மாவட்ட காவல் துறை சார்பில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வுக்கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் காவல் துறையினர் தொடர்பில் இருப்பது உறுதியானால் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமார்க்கெட்டில் மதுபானம் விற்பனை, வெளிமாநில மதுபாட்டில் கடத்தல் மற்றும் விற்பனை, டாஸ்மாக் மதுபாட்டில் கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்படும். திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்க வழிவகை செய்யப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.’’