அமீரக வரலாற்றில் முதல் முறையாக… அபுதாபி இந்துக் கோயிலில் இப்தார் விருந்து நிகழ்ச்சி... மத நல்லிணக்க நெகிழ்ச்சி!

Abu Dhabi Hindu temple iftar
Abu Dhabi Hindu temple iftar

துபாயிலிருந்து... லில்லிமேரி கமலா

அபுதாபி இந்து கோவிலில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று “ ஓம்சியத்” என்ற தலைப்பில் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது…இந்து கோவிலின் தன்னார்வலர்கள் தயாரித்த சைவ உணவானது அனைவருக்கும் வழங்கப்பட்டது..இதில் அமீரக மந்திரிகள், யூத குருமார்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

அபுதாபி – துபாய் நெடுஞ்சாலையில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, அமீரகத்தின் முதல் இந்துக்கற்கோயில் BAPS இந்து கோயில் ஆகும். உலகமெங்கும் ரமலான் மாதம் நடந்து வருவதால் அமீரகத்தில் முதல் முறையாக கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் நிகழ்ச்சியானது அபுதாபி இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதநல்லிணக்கத்தோடு சகோதரத்துவத்துடன் BAPS அமைப்பபைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வை கோவில் வளாகத்திற்குள் நடத்தினர்.

ஏப்ரல் 2ஆம் தேதி நடைப்பெற்ற இந்த நிகழ்வில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறையின் ராஜாங்க மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜையூதி, சமூக வளர்த்துறையின் தலைவர் டாக்டர் முகீர் காமிஸ் அல் கைலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் யூத குருமார்கள், சீக்கியர்கள், அரசுத்துறை தலைவர்கள், தூதர்கற், தூதரக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Abu Dhabi Hindu temple iftar
Abu Dhabi Hindu temple iftar

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமீரக மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பேசியதாவது:- "இந்திய - அமீரக உறவுகள் பல பொதுவான நலன்கள் மற்றும் மதிப்புகளை அடிப்படையா கொண்டவை. இந்திய மக்களுடனான நட்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மேலும் இந்த அற்புதமான உறவை எதிர்காலத்தில் வலுப்படுத்தவும் முயற்சிக்கிறோம். புனித ரமலான் மாதத்தை கொண்டாடும் வகையில் சர்வ சமய கூட்டத்தை நடத்தியதற்காக BAPS அமைப்புக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் அமைதி, சகிப்புத்தன்மை,சகோதரத்துவம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பாராட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது."

இதையும் படியுங்கள்:
ரஷ்யாவில் கனமழை… அணை உடைந்ததால் பதற்றம்... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
Abu Dhabi Hindu temple iftar

இந்து கோவிலின் தலைமை குரு சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்த நிலத்தை பரிசாக அளித்தமைக்கு அமீரக ஆட்சியாளர், அபுதாபி மன்னர் ஷேக் முகம்மது பின் சையத் அலி நஹ்யன் அவர்களுக்கு தனது நன்றியுணர்வை தெரிவித்தார். இந்த கோவிலின் மூலம் சகிப்புத்தன்மை மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்ப இயலும் எனவும், இன்று நீங்கள் செய்த அத்துனை நோன்பு, வழிபாடு மற்றும் பாரம்பரியம் இந்த இப்தார் நிகழ்வு மூலம் இந்த கோவிலில் உள்வாங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். "வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருள் இருப்பதில்லை; நட்பு பழகும் இடத்தில் மற்ற வேறுபாடான எண்ணங்கள் இருப்பதில்லை; அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு இருக்காது" எனக் கூறிய அவர், "இனி அபுதாபி மதநல்லிணக்கத்தின் தலைமை இடமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு BAPS அபுதாபி கோவில் பெருமை அடைகிறது," என்று தெரிவித்தார்.

வந்திருந்த அனைவரும் இப்தார் நிகழ்வில் கலந்துக்கொண்டு அதனைத்தொடர்ந்து அதிகாலையில் நோன்பு வைப்பதற்கு முன் உண்ணப்படும் சஹர் உணவிலும் பங்குக்கொண்டு மகிழ்ந்தனர். அமீரகத்தில் இந்துக்கோவிலில் நடந்த இந்த இஃப்தார் நிகழ்வு இரு நாடுகளுக்கும் இருக்கும் நட்பையும், மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் நிகழ்வாக அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com