

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சரிகம நிறுவனத்துக்கு சாதகமான இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இளையராஜா பிரபலமான இசையமைப்பாளராவார். இவர் 1,500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். தற்பொழுதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது பாடல்கள் பல ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இதனால் காப்பி ரைட் போன்ற பல்வேறு பிரச்சனைகளும் வருகின்றன. இந்நிலையில் சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் 1976-2001 வரை பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையை சட்டப்படி பெற்றிருந்ததாகவும், ஆனால் இளையராஜா அந்தப் பாடல்களை தன்னுடைய சொந்த பாடல்கள் என்று கூறி பிற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார். எங்கள் நிறுவனத்தின் பாடல்கள், இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.இதை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் நவீன் நாகார்ஜுனா, ஷ்லோகா நாராயணன், ரித்க் ரகுவன்ஷி, ரிஷிகா அகர்வால் மற்றும் அன்ஷு துளசியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் .இளையராஜாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில், சரிகமா நிறுவனத்திற்குச் சாதகமாக வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை, நெற்றிக்கண் போன்ற 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ உரிமம் பெறவோ இளையராஜாவுக்கு உரிமை இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதிப்புரிமை சர்ச்சையில் சரிகம நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு சொந்தம் என்று சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்தந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டு, நிரந்தரமான காப்புரிமையைப் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்த பாடல்கள் என்று கூறி அமேசான் மியூசிக், ஜியோசாவ்ன், ஐ-ட்யூன்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது.
1957 காப்புரிமை சட்டத்தின்படி படத்தின் தயாரிப்பாளரே படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு முதல் உரிமையாளர் என்பதை சரிகம நிறுவன வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சரிகம நிறுவனத்தினுடைய வாதத்தை ஏற்றுக் கொண்டு இடைக்கால தடைவிதித்தது. இளையராஜா சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்தவோ, உரிமை கொண்டாடவோ அல்லது மற்றவர்களுக்கு அதன் உரிமையை வழங்கவோ கூடாது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தடை விதிக்கப்படாவிட்டால் சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு ஏற்கனவே 'மூடுபனி' படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கில், 'காப்பி ரைட் சட்டப்படி ஒரு பாடலினுடைய இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும் என்றும், முழுப் பாட்டிற்கும் உரிமை கோர முடியாது என்றும், இசை படைப்பில் பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவுகள் அடங்காது' என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.