

வானிலை தரவுகளை தானாகவும் தொடர்ச்சியாகவும் சேகரித்து அனுப்பி, சேமித்து அது தொடர்பான கண்காணிப்பிற்கு உதவும் அதிவேகமான அமைப்புகளாக செயல்புரிகிறது தானியங்கி வானிலை நிலையங்கள். வானிலை தட்பவெப்பநிலைகளை weather forecasting-ஐ மிகத் துல்லியமாகச் செய்வதன் மூலம் விவசாய மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கைகள் பேரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த நன்மைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் நாட்டில் நகர்ப்புற வானிலை கண்காணிப்பு உள்கட்டமைப்பு விரிவாக்கப்படும் என்றும் இந்த ஆண்டில் (2026) சென்னை உள்ளிட்ட நான்கு முக்கிய பெருநகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளால் வரவேற்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151-வது நிறுவன தின நிகழ்ச்சி நேற்று (15.01.2026) புதுதில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரிகள், வானிலை நிபுணர்களிடையே உரையாற்றிய மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2026-ம் ஆண்டில் தில்லி, மும்பை, சென்னை, புனே ஆகிய நகரங்களில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புறங்களில், உடனடி வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் இது ஒரு முக்கியமான இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் தானியங்கி வானிலை நிலையங்களின் கட்டமைப்பானது, துல்லியமான, உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக திடீர் மழை, இடியுடன் கூடிய மழை, தீவிர வெப்ப நிகழ்வுகள் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக கணிக்க இவை உதவும் என்றும் இத்தகைய தரவு சார்ந்த முன்னறிவிப்பு பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், விவசாயம், விமானப் போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல், பொதுப் பாதுகாப்பு போன்றவற்றில் சிறந்த முடிவெடுப்பதற்கும் மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய வானிலை ஆய்வுத் துறை ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் ஒரு முக்கிய அமைப்பு என்றும் பிரதமர் அளித்த ஊக்கமும் பாராட்டும் வானிலை ஆய்வுத் துறையின் மன உறுதியை அதிகரித்து ஏராளமான புதிய முயற்சிகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் வானிலை ஆய்வுத் துறையில் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரித்துள்ளது" என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த வானிலை தானியங்கி நிலையங்கள் (Automatic Weather Stations – AWS) அமைப்பதால் மழை, வெப்பநிலை, காற்று, ஈரப்பதம் போன்ற நேரடி வானிலை தகவல் உடனுக்குடன் கிடைக்கும் . இதனால் விதைப்பு, பாசனம், அறுவடை முடிவுகளை சரியாக எடுக்க உதவும்.கனமழை, வெள்ளம், புயல் போன்றவற்றுக்கு முன்கூட்டிய பேரிடர் எச்சரிக்கைகளை எடுக்க உதவும்.
குறிப்பாக மனிதப் பிழையில்லாமல் துல்லியமான தரவு தொடர்ந்து பதிவாகும்.
மேலும் நீண்டகால காலநிலை மாற்றங்களை ஆராயவும் , மழைப்பொழிவு கணக்கீடு மூலம் நீர் மேலாண்மைக்கும், சாலை, வடிகால், கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்பாட்டுக்கும் உதவுகிறது என்பதால் அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.