
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக,இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது, யாருக்கெல்லாம் விதிவிலக்கு இருக்கிறது என்பது தொடர்பான விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கும் என்றும் தகுதியில்லாத பெண்கள் விண்ணப்பித்தால் பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தில் என்னென்ன தகவல்கள் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு விண்ணப்பத்தாரர் சரியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக ஒவ்வொரு ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்களிலும் தனித்தனியே நான்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வரும் நிலையில் சிலர் இன்னமும் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது இதுதொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பத்தினை வாங்கி பூர்த்தி செய்யும் போது குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண், IFSC Code, ஆகியவற்றை சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறை மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில் இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் தொடர்ச்சியாக சிலர் தவறு செய்வதாக கூறப்படுகிறது. எனவே, புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனென்றால் தற்போது மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பகுதிவாரியாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள், விண்ணப்பிக்காத பெண்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
மகளிர் உரிமை திட்டத்தில், குடும்பத்தில் எவரேனும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்தாலும் அந்த குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள் இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சரியாகவும் கவனமாகவும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை அதனுடன் இணைத்து விண்ணப்பத்தை முகாம் நடைபெறும் நாளன்று சென்று கொடுத்து ஒப்புகைசீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் இதுவரை மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவி கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 45 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.