
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிவிட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள், விடுபட்டவர்கள், தகுதியான பெண்கள் எல்லோரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதியான பெண்கள் எல்லோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தொடங்கிவிட்டனர். அப்படி விண்ணப்பிக்க உள்ள பெண்கள் அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி சரியான தகவல்களை பூர்த்தி செய்து அங்கேயே தரலாம். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வெளியில் யாரிடமும் கிடைக்காது.
பதிவு செய்து கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுள்ள மற்றும் ஏற்கனவே பதிவு செய்து விடுபட்ட அல்லது மறுக்கப்பட்ட மகளிர், இந்த முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதி வரம்புகள் மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* 21 வயது நிரம்பிய பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால் குடும்பத்தில் உள்ள எவரும் இதற்கு முன் மகளிர் உரிமைத்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்கள்.
* ஒரு குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இது தவிர அந்த குடும்பத்தில் மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
* குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தொழில் வரி கட்டுபவர்கள், ரூ.50 இலட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை செய்து GST செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
* சொந்தப் பயன்பாட்டுக்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் அரசுதிட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் கார் உள்ளிட்ட நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
* அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்களாக இருப்பர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* கூடுதலாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும், இந்த திட்டத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இந்த நான்கு ஆவணங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இது ஒரு பொன்னான வாய்ப்பு. இம்முறை விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை அரசு தீர பரிசீலித்து, கள ஆய்வு செய்து தேர்வு செய்ய உள்ளது. அதனால், அனைத்து ஆவணங்களும், தகுதிகளும் சரியாக இருப்பவர்களுக்கு இம்முறை கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்தே தீரும்.
அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் மீதான விண்ணப்பங்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதிகாரிகள் உங்களிடத்தில் தெரிவிப்பார்கள். அப்போது, அதற்கான முறையான விளக்கம் கொடுத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது. அதேநேரம் தவறான தகவல்கள், போலி ஆவணங்கள் மற்றும் தகுதியற்ற காரணங்கள் இருந்தால் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.