
சமூகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மாநில அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் (Women's Self Help Group Loan Scheme)மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது. இந்த திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு அரசு வேலை கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே இந்த அரசு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது, மகளிர் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களில் ஊக்குனர், பிரநிதி அல்லது குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
சமுதாய வள பயிற்றுநர் வேலைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை..
* குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்திருப்பின் கூடுதல் தகுதியாக கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
* குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* மகளிர் சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
* அதேபோல் சமுதாய வள பயிற்றுநர்கள் (விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், வாழ்வாதாரம்), சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்சார் சமுதாய வள பயிற்றுநர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
* கைபேசி செயலிகளை( Mobile Apps) நன்றாக பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* சுய உதவி குழுவில் விண்ணப்பதாரருக்கு வாரா கடன் நிலுவையில் இருக்கக்கூடாது.
இந்த வேலைக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) அல்லது மகளிர் திட்ட அலுவலகத்திலிருந்து (DMMU) விண்ணப்பங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் (BMMU) வரும் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் பயிற்சி நடத்துவதற்கான பேச்சுத் திறன், உரிய குரல் வளம் பெற்றவராக இருக்க வேண்டும். சமுதாய வள பயிற்றுனராக விண்ணப்பிக்கும் பெண்கள் தொண்டு நிறுவன பணியாளர்களாக இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்படும் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு சேவையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17-ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.