

பள்ளிகளுக்கு சிறப்பு பேச்சாளர்களை அழைக்கும் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வழங்கியுள்ள பட்டியலில் இடம்பெற்ற சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக யாரையும் அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள இயக்குனர் கண்ணப்பன் சிறப்பு அழைப்பாளர்களின் பின்னணியை அலசி ஆராய அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, நடத்திய சொற்பொழிவு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் முறையான அனுமதி இன்றி நடத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பள்ளிகளுக்கு அழைப்பாளர்களை அழைப்பதில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும். துறை அனுமதியின்றி தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. சுற்றறிக்கைகூட சரியாக தயாரிக்க தெரியாத சிலரால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மீண்டும் அதனை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.