
2023-24-ம் ஆண்டில் நாடு முழுவதும் பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்கள் 37 லட்சம்!
நாடு முழுவதும் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கல்வியே எல்லாக் கல்விக்கும் அடிப்படையாகும். அடிப்படை உறுதியாக இருந்தால்தான் கட்டப்படும் மாளிகையும் உறுதியாக நிற்கும். புதிய சமுதாயம் காணப்புறப்படுவோர் இதனை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவரிடம் உள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. மனித வர்க்கமாகிய புத்தகத்தை விட சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டார் மகாத்மா காந்தி.
பெருமளவிலான மாணவர்கள் பள்ளி படிப்பை துறந்து விட்டு குழந்தை தொழிலாளராகி உள்ளனர். பத்தாம் பகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடைப்பட்ட நிலையில் பெண் பிள்ளைகளின் இளவயது திருமணங்களும் கல்வியின் இடைநிற்றலுக்கு காரணமாக இருக்கலாம். இவை பற்றியெல்லாம் அரசும், கல்வித்துறையும் ஆராய்ந்து உண்மைகளை வெளியிட வேண்டும்.
அண்மை காலமாக கல்வி கூடங்களில் படிக்கும் மாணவர்கள் பற்றி வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியடைக்கூடியாதாகவே உள்ளன. அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி எல்லாவற்றிலும் கவலை தரும் செய்திகளே உலா வருகின்றன. அரசும், கல்வித்துறையும் எடுக்கும் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைந்த நீராக வீணாகி போவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி குறித்த தரவுகளை சேகரிக்க ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ என்ற தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் பராமரித்து வருகிறது.
இந்த தளம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து அதிகமான மாணவர்கள் இடை நின்றிருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில், 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 25.17 கோடியாக இருந்தது. இது 2023-24ல் 24.80 கோடியாக சரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 37 லட்சம் மாணவ-மாணவிகள் இடை நிற்றல் ஆகி உள்ளனர். இதில் மாணவர்கள் 21 லட்சமாகவும், மாணவிகள் 16 லட்சமாகவும் உள்ளனர். இது ஆண்டுதோறும் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதை காட்டுகிறது.
‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ தளத்தில் பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட மாணவர் வாரியான தரவுகளைக் கொண்டு, மாணவர்களின் இடைநிற்றலை இப்போது துல்லியமாக அடையாளம் காண முடியும். அத்துடன் அவர்களை கண்காணித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரவும் முடியும்.
புதிய தலைமுறையை உருவாக்குவது கல்வியாகும். அந்த கல்வியை மாணவர்கள் புறக்கணிக்கும் காரணத்தை கண்டறிய வேண்டும். முன்பே அரசும், கல்வித்துறையும் இணைந்து கண்காணித்திருந்தால் இந்த இடைநிற்றல் ஏற்பட்டிருக்காது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.