

மன அழுத்தம் தரும் செல்போன் சத்தமே காதுல விழக்கூடாதுன்னு நினைக்கிறீர்களா? பாஸ்ட்ஃபுட் அயிட்டமே கண்ணுல விழாம பசுமை நிறைந்த சூழலில் பாரம்பரிய உணவு வேண்டுமா? ஏசி இல்லாமல் வேப்பமரக் காத்துல சுகமான தூக்கம் வேண்டுமா?
அப்ப நீங்க ஆந்திராவில் இருக்கும் கூர்மா கிராமத்துக்குத் தான் செல்ல வேண்டும். ஆம் செல்போன், மின்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமின்றி, முற்றிலும் இயற்கையான முறையில் மக்கள் வாழும் ஆச்சரியமான கிராமம் தான் கூர்மா கிராமம். (Kurmagram)
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமம் ஒரு 'வேத கால கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமம், ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தைய 18 ஆம் நூற்றாண்டு கால வாழ்க்கை முறையைப் பின்பற்றும் கிராமமாக ஒரு சிறிய சமூகத்தின் இருப்பிடமாக அறியப்படுகிறது.
கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை, பிரம்ம முகூர்த்தத்தின் போது அதிகாலை சுமார் 3:30 மணியளவில் தொடங்கி, இரவு 7:30 மணியளவில் உறங்கச் செல்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், நவீன வசதிகளைப் பெறும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், கிராம மக்கள் தாங்களாகவே பொருள் சுகபோகங்களைத் துறந்துள்ளனர். 'எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை' என்ற கொள்கையே அவர்களின் வாழ்க்கை முறையை வழிநடத்துகிறது.
குர்மகிராமில் உள்ள வீடுகள் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி கிராம மக்களாலேயே கட்டப்படுகின்றன. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு, 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ முகலிங்கம் கோயிலின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.
கிராமத்தில் உள்ள எந்த வீட்டிலும் எரிவாயு அடுப்புகள் இல்லை. மாறாக பாரம்பரிய விறகு அடுப்புகளிலேயே அனைத்து சமையலும் செய்யப்படுகிறது. கிராம மக்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான காய்கறிகளையும் தானியங்களையும் தாங்களே பயிரிடுகின்றனர். கிராமத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு 'பிரசாதம்' என்ற பெயரில் மரியாதையுடன் உணவு பரிமாறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கிராமத்தில் மின்சாரம், செல்போன், இணையம் மற்றும் தொலைக்காட்சி போன்ற நவீன மின்னணு சாதனங்களோ உபகரணங்களோ இல்லை. குறிப்பாக, கிராமம் முழுவதிலும் ஒரே ஒரு கைபேசி மட்டுமே உள்ளதாகவும் அதுவும் அத்தியாவசியமான வெளித் தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள குழந்தைகளுக்கு குருகுலக் கல்வி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.. . இந்தக் குருகுலம் கணிதம், அறிவியல், சமஸ்கிருதம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கலைகள் மற்றும் மகாபாரதம் ஆகிய பாடங்களை கற்பிக்கிறது. மாணவர்கள் மகாபாரதம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாடக நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்
குறிப்பாக இங்கு பணப் புழக்கம் இல்லை, பெரும்பாலும் பண்டமாற்று முறை பின்பற்றப்படுகிறது.இந்த கிராம மக்கள் அமைதியான மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை விரும்பி வாழ்கின்றனர்.
இந்தக் கிராமத்தில் உள்ள 14 குடும்பங்களும் ஸ்ரீகிருஷ்ணரின் சில தீவிர பக்தர்களாக அனைவரும் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகப் பயிற்சிக்காக அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகமும் இயற்கையும் இணைந்து வெளி நகர பரபரப்பில்லாமல் இனிமையான கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்கின்றனர் இந்த கிராம மக்கள். இதை அறிந்த மக்கள் தற்போது சுற்றுலாவாக இந்தக் கிராமத்தை வந்து பார்த்து மகிழ்கின்றனர்.