ஜூன் 9ம் தேதி பதவியேற்பு விழா... மூன்றாவது முறை ஆட்சியைப் பிடிக்கும் பாஜக!

Narendra Modi
Narendra Modi

2024ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் 240 இடங்களை கைப்பற்றி, பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. அந்தவகையில் வருகின்ற ஜூன் 9ம் தேதி பாஜக பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஆண்டு 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 7வது கட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து நேற்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால், போட்டியின்றி வெற்றிபெற்றார்.

மற்ற 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேச வாரணாசி தொகுதியில் மோடி 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.

பொதுத் தேர்தலில் 240 இடங்களை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 36.56% வாக்கு சதவீதத்துடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

பாஜகவிற்கு அடுத்ததாக காங்கிரஸ் 21.19% வாக்கு சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமாஜ்வாதி கட்சி (SP) 4.58% வாக்கு சதவீதத்தையும், திரிணமூல் காங்கிரஸ் (TMC) 4.37% வாக்கு சதவீதத்தையும் பெற்றது. வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP) 2.06% வாக்கு சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி (BSP) 2.04% வாக்கு சதவீதமும் பெற்றுள்ளன.

அந்தவகையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. பிரதமராக மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் வரும் ஜூன் 9ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் ‘வெற்றிகரமான தோல்வி’யை சந்தித்த தமிழிசை!
Narendra Modi

இதனையடுத்து உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா'-வும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com