
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புதிதாக வருமான வரிக் கணக்குக் தாக்கல் படிவங்கள் எளிமையாக்கப் பட்டிருக்கின்றன. அந்த இணையதளத்திலும் ஒரு சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும், வருமான வரிப் படிவங்களும் தாமதமாகவே வெளியிடப் பட்டன. இதையெல்லாம் கணக்கில் வைத்து தான் வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, இன்று முதல் வெறும் 12 நாள்களே உள்ளன. ஆம்... வருமான வரிக் கணக்க தாக்கல் செய்ய வரும் செப்டம்பர் 15-ம் தேதியே கடைசி தேதி.
வரும் 15ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக அபராதத்துடன் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.அதாவது, காலதாமதமாக வரி செலுத்துவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.
வருமான வரி சட்டப்பிரிவு 234F-ன் கீழ் இதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோரின் வருமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது.ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுவோர், தாமதமாக வரி தாக்கல் செய்வதற்கு 5,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுவோர் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.
எனவே, வரும் 15ம் தேதிக்கு முன்னதாகவே வரி தாக்கல் செய்தால், அபராதம் செலுத்துவதை தவிர்க்கலாம்.