
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் ஆரம்பித்து 2023-ம் ஆண்டு வரை உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகளவில் இருந்தது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்தது. இந்திய பொருளாதாரம் சரிந்தது. ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசில் உருமாற்றங்கள் ஏற்பட்டு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், தற்போது கொரோனா மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, குஜராத், போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 50-க்கு கீழ் தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று 460 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 114 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேற்று ஒரேநாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதால் மீண்டும் ஒரு கொரோனா அலை வந்துவிடுமோ என்ற பயம் மக்களை ஆட்கொண்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. வீரியம் குறைந்த வகை என்பதால், ஆபத்தான நிலை இல்லை என பொதுச் சுகாதாரத்துறை கூறியது. மேலும், மரபணு பகுப்பாய்வில் ஒமைக்ரான் வைரஸின் உட்பிரிவுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளதால் கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொது வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் பொதுமக்கள் தங்களது கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை அடிக்கடி தொடுவதை தவிர்த்தல் அவசியம். பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் இருப்பினும் முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்’ என அறிவுறுத்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டோர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த மோகன் (60), கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.