

தங்க நகைகள் வாங்கும் போது தங்கத்தின் தரத்தை குறைத்துக் கொடுத்து, 22 கேரட் என்றால் 20 கேரட் 18 கேரட் என தங்க நகை கடைக்காரர்கள் ஏமாற்றி வந்தனர். தற்போது 91.6, BIS ஹால்மார்க் போன்ற முத்திரையின் காரணமாக செய்கூலி, சேதாரம் மற்றும் சலுகைகள் மூலம் ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் தங்க நகைகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. தங்க நகை வாங்குவதற்கு தனியாக இருக்கும் கடையை தவிர்த்து, அருகருகே இருக்கும் இடத்தில் வாங்குவது சிறந்தது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் அடுத்த கடைக்கு சென்று விடுவார்கள் என்பதால் சேதாரத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு அடுத்தடுத்த கடைகளில் விலைகளை கேட்டு தெரிந்து தெரிந்து வாங்குவது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
2. பர்னிச்சர் ,துணிக்கடை, நகை கடை என இருக்கும் கடைகளை தேர்ந்தெடுக்காமல் நகை கடை மட்டும் இருக்கும் இடங்களில் தங்க நகைகளை வாங்குவது லாபகரமானதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் வேறு இடத்தில் வாங்கி விற்பனை செய்வதால் விலை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3. ஒரு கடையில் நாம் தேர்ந்தெடுத்த நகைக்கு விற்பனையாளர் எஸ்டிமேட் போட்ட விலை மாற்றத்திற்கு உரியது. ஆகவே அங்கிருக்கும் மேலாளரை அழைத்து சேதாரத்தை குறைக்க சொல்ல வேண்டும் .உதாரணமாக 9 % சேதாரம் என்றால் மேலாளர் 3% குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4. மேலும் குறைத்த சேதாரத்துடன் ஏற்கனவே கடையில் கிராமிற்கு ரூ 100 குறைவு, ஒரு கிராம் தங்கத்திற்கு ஒரு கிராம் வெள்ளி இலவசம் என்பது போன்ற சலுகைகளும் இதனுடன் சேருமா? என்பதையும் கேட்டு உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் சேதாரத்தில் 3 % குறைத்து சலுகை கிடையாது எனக் கூறினால் நமக்கு எந்த பலனும் இல்லை.
5. பழைய தங்க நகைகளை மாற்றும் போது, நமக்கு பிடித்த டிசைன் பிடித்த அளவுகளில் கிடைத்தால் மட்டுமே கடைக்காரரிடம் பழைய நகைகளை கொடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே கொடுத்து விட்டால் நகையை உருக்கி விட்டோம் என கூறினால் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அந்த கடையிலேயே நகை வாங்க வேண்டி இருக்கும்.
6. நாம் புதிதாக வாங்கிய நகையை சேதாரத்துடன் வாங்கிய மதிப்பை விட 5% ஆவது சந்தையின் விலை அதிகரிக்கும் போது விற்பது தான் லாபகரமானது.
7. ஒரு கடையில் மட்டும் நகை பிடித்து விட்டது என்பதற்காக அந்தக் கடையிலேயே வாங்க கூடாது. நான்கைந்து கடைகளில் விசாரித்து வாங்கும் போதுதான் உண்மையான விலை தெரிய வரும்.
8. எந்த கடையிலும் டீ, காபி, குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் நாம் அவற்றை குடித்து விட்டோம், என்பதற்காக அங்கேயே நகை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, குற்ற உணர்ச்சியால் சில சமயம் சேதாரம் அதிகமாக இருந்தாலும் வாங்கும் நிலை ஏற்படும் என்பதால் நகை வாங்கிய பிறகு பருகுவதே சிறந்தது.
9. விற்பனையாளர் கொடுத்த தங்க நகையின் எஸ்டிமேட் விலை, பில்லில் சரியாக உள்ளதா என சரிபார்த்த பிறகு பணம் செலுத்த வேண்டும்.
10. பழைய தங்க நகைகளை பணமாக்க வேண்டும் என்றால் விற்க முற்படும்போது உருக்கி விற்றால்தான் சரியான பணம் கிடைக்கும்.
இன்றைய காலகட்டத்தில் தங்க நகை உச்சத்தை அடைந்து வரும் வேளையில் மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு தங்க நகைகளை வாங்குவது மிகவும் நல்லது.