செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள், ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தைப் பாதுகாப்பற்றதாக்கி வருகின்றன. சமீபத்திய ஆய்வுகள் அமேசான் தளத்தில் AI மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கின்றன.
இன்றைய உலகில் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே அதிகம் விரும்புகிறார்கள். எங்கும் அழையாமல், வீட்டில் இருந்தப்படியே ஷாப்பிங் செய்வது மக்களுக்கு வசதியாக உள்ளது. இதைப் பயன்படுத்தி ஸ்கேமர்ஸ் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். அதுவும் அவர்கள் ஏமாற்ற முயற்சிக்கும் உத்திகள் நிஜமாகவே மக்களை நம்ப வைத்துவிடுகிறது.
இப்படியான நிலையில், சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபீ (McAfee) வெளியிட்ட "2025 குளோபல் பிரைம் டே ஸ்கேம்ஸ் ஸ்டடி" (2025 Global Prime Day Scams Study) அறிக்கையின்படி, அமேசான் பிரைம் டே போன்ற பெரிய விற்பனை நிகழ்வுகளை குறிவைத்து AI-யால் மேம்படுத்தப்பட்ட மோசடிகள் பெருமளவு அதிகரித்துள்ளன. இந்தியாவில் 96% நுகர்வோர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய திட்டமிடும் நிலையில், 71% பேர் AI-யால் ஏற்படும் மோசடிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடிக்காரர்கள் AI மூலம் மிகவும் நம்பகமான, தனிப்பயனாக்கப்பட்ட தாக்குதல்களை உருவாக்குகிறார்கள். 36,000 க்கும் மேற்பட்ட போலி அமேசான் வலைத்தளங்கள் மற்றும் 75,000 க்கும் மேற்பட்ட அமேசான் போலியான குறுஞ்செய்திகளை மெக்காஃபீ கண்டறிந்துள்ளது. இந்த போலியான வலைத்தளங்கள் மற்றும் செய்திகள் அசல் அமேசான் தளம் போலவே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் எளிதில் ஏமாறும் நிலை உருவாகிறது.
இதிலிருந்ந்து தப்பிக்க சில வழிகள்:
1. கடவு எண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
2. சலுகைகள் ஏதேனும் வந்தால், அமேசான் செயலி வலைதளத்தில் சரி பார்த்து உறுதி செய்துக்கொள்ளவும்.
3. அமேசான் போன்ற அதிகாரப்பூர்வ செயலிகள் மட்டுமே பயன்படுத்துங்கள்.
4. இரண்டு காரணி அங்கீகாரத்தை (Two-Factor Authentication - 2FA) செயல்படுத்தவும்.
5. அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் எதாவது பணம் பறிக்கப்படுகிறதா என்பதை தெரிந்துக்கொள்ள உங்கள் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.