
இறைவன் மிகப்பொியவன். இறைவன் துணையின்றி எதுவும் நடப்பதில்லை. இறையருள் இல்லையேல் எதுவும் இல்லை என புகழும் நாம், நமது வாழ்வில் தொய்வடையும் நிலையிலோ, தொடர் தோல்வி அடையும் நிலையிலோ இறைவன் மீதும், நமது கிரக அமைப்புகளின் மீதும் அதன் தாக்கம் குறித்தும், எதிா்மறையாய் பேசும் போதும் நிதானம் தவறிவிடுகிறோம்.
கடுஞ்சொல் பிரவாகம் நம்மை சூழ்ந்துகொண்டு நம்மை பாடாய்ப் படுத்துவதுடன் நாமும் சிரமப்பட்டு, நம்மைச் சாா்ந்தவர்களுக்கும் சங்கடங்களைப் பரிசாகத் தருகிறோம்.
நாம் வருமுன் காவாமல், அகலக்கால் வைத்து அதனால் வரும் அல்லல்களை பட்டியலிட்டு புலம்பும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இந்த விஷயத்தில் நாம் நிறையவே பக்குவப்படவேண்டும் அதுதான் நமக்கான தேவை. பொதுவாக நமது கவனம் சிதறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டைப் பொியதாகக் கட்டியிருக்கவேண்டாம், விலை ஏறினால் லாபம் கிடைக்கும், என்ற நோக்கத்தில் பிளாட்டில் பணத்தை முதலீடு செய்திருக்க வேண்டாம், லோன் போட்டு காா் வாங்கியிருக்க வேண்டாம், உன் சகோதரியின் கணவருக்கு வீடு கட்ட கடன் கொடுத்திருக்க வேண்டாம், இப்படி அளவுக்கு மீறி வருமானம் வந்த நிலையில் கணவனும் மனைவியும் திட்டமிடாமல் செய்த தவறுகளையும் சொல்லிக்காட்டாமல் எது வந்தாலும் சமாளிக்கும் திறனோடு வாழ்க்கையை ஓட்டவேண்டும்.
அப்போது நாம் நமது விடாமுயற்சியை கைவிடக்கூடாது. அதை விடுத்து அவ்வளவுதான் வாழ்க்கை! யாா் கண்பட்டதோ தொியவில்லை? எல்லோரும் நமது வளா்ச்சியைப் பாா்த்து பொறாமைப்பட்டாா்கள், எனக்கூறுவது தவறு.
மகனுக்கு கிரகம் சரியில்லை அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது, என்றெல்லாம் பேசுவது மிகவும் தவறு.
நாம் திட்டமிடாமல் வருமுன் பாதுகாக்காமல் அகலக்கால் வைத்தது நம்முடைய தவறுதானே! நம்முடைய தவறுக்கு நம்மை நாமே சரிசெய்துகொள்ளாமல் அடுத்தவர்மீது பழியைப்போடுவதுஎந்த விதத்தில் நியாயம்?
இந்த சமுதாயம் வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். நரம்பில்லாத நாக்கு எப்படியும் பேசுமே. நமது நிலைஅறிந்த உறவு, மற்றும் நட்பு வட்டங்கள் கூட நமக்கு உதவாத நிலை வரலாம், அதுசமயம்தான் நமக்கு விவேகம் வரவேண்டும். நமது புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும்.
உதாரணமாக கிாிக்கெட் விளையாட்டில் நமக்கு பிடித்த அணியே தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என நினைப்பதும் தவறுதான்.வெற்றி தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும்.
வெற்றி வரும்போது தலைகால் புாியாமல் ஆடுவதும், தோல்வி கண்டு துவளுதும், தவறான நடைமுறை.
இதைத்தான் "தோரோ என்ற அறிஞர்" தனது கருத்தாக இளமை இருக்கும்போது சேமிப்பு செய்; முதுமை அடையும்போது செலவு செய் என சொல்லியுள்ளாா்.
நாம் உயர் நிலையை அடைய, அடைய ,நம்மிடம் பணிவு வரவேண்டும். வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக் கொள்வது நல்லதுதான், அதே நேரம் தொடர் வாழ்க்கைக்கான பொருளாதார சிக்கல் வராமல் பாா்த்துக்கொள்வதே கெட்டிக்காரத்தனம்.
ஆக அபரிமிதமாய் வருவாய் வரும் நிலையில், மனைவிடம் கலந்து பேசி அகலக்கால் வைக்காமல், இருந்து சிக்கனம் கடைபிடித்து அடுத்தவருக்காக வாழாமல், நம் வாழ்க்கை நம் கையில் எனும் தாரக மந்திரத்தை கடைபிடித்து வருமுன் காப்பதே நல்லது. அப்போதுதான் வரும் துயரை சமாளிக்கலாம்.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்ணல் காந்தி அடிகள் சொன்னது போல ஒரு நல்ல லட்சியத்தை அடையவேண்டுமானால், நாம் நல்ல வழிமுறையை கையாளவேண்டும் எனும் வாக்கியங்களுக்கேற்ப வாழ்ந்து பாருங்கள் வெற்றி தேவதை நம்மைத்தேடி வருவாள். அப்போது நாம் கடைபிடிக்க வேண்டியதே வருமுன் காப்பதாகும். சரியா தோழிகளே!