

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. அதேபோல் இரவு நேரத்திலும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. திடீரென ஏற்பட்ட இந்த காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, வைரஸ் தொற்று, இன்ஃப்ளூயன்ஸா (flu) போன்ற பல்வேறு பாதிப்புகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக இரவில் ஏற்படும் கடுமையான குளிரால் மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அதிக ஈரப்பதம், மிதமான முதல் அமைதியான காற்று நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை பனி உருவாவதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இரவில் வெப்பநிலை குறைந்தது, அதிக ஈரப்பதம் ஆகியவற்றால் மூடுபனி ஏற்பட்டது. பிப்ரவரி மாத இறுதிவரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்த முதல் மிதமான பனி மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பகல் மற்றும் இரவு நேரத்தில் ஏற்படும் கடும் குளிரால் வைரஸ் தொற்று, இன்ஃப்ளூயன்ஸா (flu) போன்ற பாதிப்புகள் குறைந்து ‘பெல்ஸ் பால்ஸி’ என்று அழைக்கப்படும் முகவாத பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த வருடமும் இல்லாத வகையில் சென்னையில் கடந்த சில நாட்களாக ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் அளவுக்கு கடும் மக்களை குளிர்வாட்டி வதைத்து வருகிறது. மார்கழி மாதம் முடிந்து தை பிறந்ததும் குளிர் படிப்படியாக குறையும் என்று சொல்வார்கள். ஆனால் தை முடியப்போகிறது ஆனாலும் குளிரின் வீச்சு குறைந்தபாடில்லை. இந்த திடீர் தட்பவெப்ப மாற்றத்தால் சென்னை மக்களிடையே ‘பெல்ஸ் பால்ஸி’ எனப்படும் முகவாதம் பாதிப்பு வேகமெடுத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெல்ஸ் பால்ஸி (Bell's palsy) என்பது முக நரம்பில் ஏற்படும் வீக்கத்தால், முகத்தின் ஒரு பக்கம் திடீரென தற்காலிகமாக முடங்கிப்போகும் நிலையாகும்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகநேரம் வெளியே சுற்றுபவர்களுக்கு பெல்ஸ் பால்ஸி எனப்படும் முகவாத பாதிப்பு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக நடந்தோ அல்லது பஸ், சைக்கிள், மற்றும் பைக்கில் செல்லும் போது காது வழியாக நேரடியாக உடலுக்குள் செல்லும் குளிர்ந்த காற்று, முகத்தில் உள்ள நரம்பு பகுதியை தற்காலிகமாக செயலிழக்க செய்கிறது. இதனால் முகம் திடீரென ஒரு பக்கம் கோணலாக இழுத்து கொள்ளும். இதனால் சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை இழப்பு, காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் பதற்றம் அடையாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றால் ஸ்டெராய்டு மருந்துகள் மற்றும் பிசியோதெரபி மூலம் குணமாக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முகவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெறும்பட்சத்தில் 2 முதல் 3 வாரங்களில் பிரச்சனையை முழுமையாக சரி செய்து விடலாம் என்றும் அலட்சியப்படுத்தினால் இந்த பாதிப்பு குணமடைய 3 முதல் 6 மாதங்களாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரும்பாலும், இந்த தற்காலிக முடக்கம் சில வாரங்கள் முதல் மாதங்களுக்குள் சரியாகிவிடும்.
தற்போது சென்னையில் அரசு மருத்துவமனைகளில் முகவாதம் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் மற்ற காலநிலையை விட குளிர் காலத்தில் இந்த பாதிப்பு வேகமெடுக்கும். எனவே பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது காதுக்குள் காற்று புகாமல் இருக்க ‘மப்ளர்’ கொண்டு காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. மேலும் பஸ்சில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்வதை குறைத்துக்கொண்டால் இந்த முகவாத பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.