மலேசியாவில் அதிகரிக்கும் ஈ- வாலெட் பயன்பாடு – மலேசியா புள்ளிவிவரத் துறை அறிவிப்பு!
மலேசியாவில் மின்னணு பணப்பை (ஈ-வாலெட்) பயன்பாடு கடந்த ஆண்டை விட 70.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக மலேசியா புள்ளிவிவரத் துறை (Department of Statistics Malaysia - DOSM) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மலேசியா புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான 'மலேசியா டிஜிட்டல் பொருளாதாரம்' அறிக்கையின்படி, ஈ-வாலெட் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கிய மக்களின் பயணமே இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமூக இடைவெளியைப் பேணவும், உடல்ரீதியான பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்கவும் ஈ-வாலெட்கள் ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைந்தன. ஆனால் இந்த பழக்கம் பெருந்தொற்றுக்குப் பிறகும் தொடர்கிறது. மலேசியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளில் இன்றும் தொடர்கிறது.
2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் ஈ-வாலெட் பயன்பாடு 70.2% அதிகரித்துள்ளது. அதாவது நாட்டில் மிக அதிகமானோர் டிஜிட்டல் பரிவர்த்தனையையே உபயோகப்படுத்துகின்றனர் என்பதை காட்டுகிறது. அதற்கு காரணம் டிஜிட்டல் வளர்ச்சி என்றே கூறலாம்.
அதேபோல் மலேசிய அரசு, டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 'இ-சுகான்', 'இ-பெனுவா' போன்ற திட்டங்கள் ஈ-வாலெட் பயன்பாட்டைப் அதிகமாக்குவதில் முக்கியப் பங்காற்றின.
மேலும் ஈ-வாலெட்கள் மூலம் பொருட்களை வாங்குதல், பில்களை செலுத்துதல், பணப் பரிமாற்றம் செய்தல் போன்ற அன்றாடச் செலவுகளை எளிமையாகவும், வேகமாகவும் மேற்கொள்ள முடிவது மக்களின் விருப்பத்தைப் பெற்றுள்ளது.
பல்வேறு ஈ-வாலெட் சேவை வழங்குநர்களிடையே நிலவும் போட்டி, கவர்ச்சிகரமான சலுகைகள், கேஷ்பேக் திட்டங்கள், கூப்பன்கள் போன்றவற்றை வழங்க வழிவகுத்துள்ளது. இதுவும் பயன்பாட்டை அதிகரிக்க ஒரு காரணம்.
இந்த வளர்ச்சி மலேசியாவின் நிதிச் சந்தையில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. பணமில்லா பொருளாதாரம் உருவாவதற்கு இது ஒரு முக்கிய படியாக அமையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இது சிறு மற்றும் குறு வணிகர்கள் டிஜிட்டல்மயமாக்கலை மேற்கொள்ளவும், நிதிச் சேவைகளை அணுகவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா புள்ளிவிவரத் துறை, இந்த வளர்ச்சியை ஒரு நேர்மறையான அறிகுறியாகப் பார்க்கிறது. நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு இது ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்றும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் மலேசியாவின் பங்கை அதிகரிக்கும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.