
ஜெட் லேக் என்பது வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு இடையே நீண்ட தூரம் பயணிக்கும் போது ஏற்படும் ஒரு நிலை. இதில் நம் உடலின் இயற்கை தூக்க சுழற்சி பயணத்தின் போது ஏற்படும் நேர மாற்றங்களால் பாதிப்படைகிறது. இதன் காரணமாக சோர்வு, தூக்கமின்மை, செரிமான பிரச்சனை மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
ஜெட் லேக் பிரச்சனையை சமாளிப்பதற்கு, (குறிப்பாக வேறு நேர மண்டலத்திற்கு பயணம் செய்யும்பொழுது) ஜெட் லாக்கை குறைக்க பயணத்துக்கு முன்பு நம்முடைய தூக்க அட்டவணையை சரி செய்யலாம். பயணத்திற்கு சில நாட்கள் முன்பிருந்தே, புதிய நேர மண்டலத்திற்கு ஏற்றவாறு தூங்கும் நேரத்தையும், விழித்திருக்கும் நேரத்தையும் மாற்றியமைக்க தொடங்கலாம்.
விமான பயணத்திற்கு முன்பு நன்கு தூங்குவது அவசியம். இது நம் உடலை தயார்படுத்த உதவும். அத்துடன் நாம் சென்று சேரும் இடத்திற்கு ஏற்ற நேரங்களில் சாப்பிடவும், தூங்கவும் முயற்சித்தால் ஜெட் லேகின் தீவிரம் குறையும்.
விமான பயணம் நம் உடலை வறட்சி அடைய செய்யும். எனவே பயணத்தின் பொழுது நிறைய தண்ணீர் குடிக்கலாம். உடலை நீரேற்றமுடன் வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் நீரிழப்பு ஜெட் லேக் அறிகுறிகளை மோசமாக்கும்.
காஃபின் மற்றும் ஆல்கஹால் இரண்டும் நம் தூக்கத்தை சீர்குலைக்கும். விமானத்தில் செல்லும்பொழுது காஃபின் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வது, மது போன்ற பானங்களை தவிர்ப்பது போன்றவற்றை செய்யலாம்.
விமான பயணத்தின் போது நாம் செல்ல வேண்டிய இடத்தில் இரவு நேரங்களில் விமானத்தில் தூங்க முயற்சி செய்வது பலனளிக்கும். முடிந்தவரை கேபினில் எழுந்து நடக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முடிந்த அளவு நேரடி விமானங்களை தேர்வு செய்யலாம் அல்லது இடைவேளைகளை குறைக்கலாம்.
நாம் சேர்ந்த புது இடத்தின் பகல் நேரங்களில் நிறைய உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஜெட் லாக்கை குறைக்க உதவும். பகல் வெளிச்சம் நம் உடலின் உள் இயக்க கடிகாரத்தை சரி செய்ய உதவும். எனவே பகல் நேரத்தில் வெளியில் செல்வதும், சூரிய ஒளியை பெறுவதும் நல்ல பலனைத் தரும். செரிமான பிரச்சனைகளை தவிர்க்க ஹெவியான உணவுகளை தவிர்த்து எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
விமானத்தில் பயணிக்கும் பொழுது திரை நேரத்தை கட்டுப்படுத்தலாம். நம்முடைய ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளின் நீல ஒளி தூக்கத்தை கெடுக்கும். எனவே விமானத்தில் திரைகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தலாம்.
தரை இறங்கிய பின் முடிந்த வரை சூரிய ஒளியில் இருப்பது நம்முடைய உடலின் இயற்கையான தூக்க சுழற்சியை சரி செய்ய உதவும். ஜெட் லேக் என்பது ஒரு தற்காலிக நிலை. அது சில நாட்களுக்குள் சரியாகிவிடும். அதுவரை பொறுமையை கடைப்பிடித்து நம் உடலை சரி செய்ய நேரம் கொடுப்பது அவசியம்.