வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவிற்கு வந்து தங்கியிருக்கும் போது, இந்திய வங்கி கணக்கோ அல்லது இந்திய மொபைல் எண்ணோ இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இந்த 'வாலட்' (Wallet) உதவுகிறது. அதாவது டிஜிட்டல் முறையில், கார்டு அல்லது ரொக்கம் இல்லாமல், மொபைல் ஆப்ஸ்கள் மூலம் பாதுகாப்பாகப் பணம் செலுத்த டிஜிட்டல் வாலட் (E-Wallet) உதவுகிறது.
இந்தியாவில் Google Pay, Paytm, PhonePe, Amazon Pay போன்றவை முன்னணி வாலட்களாக உள்ளன. இவை உடனடிப் பரிமாற்றம், பில் கட்டணம், மற்றும் UPI மூலம் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணம் செலுத்தப் பயன்படுகின்றன.
இதன்மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இனி ரொக்கப் பணம் இல்லாமலேயே, இந்தியாவின் 'யுபிஐ' (UPI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக 'யு.பி.ஐ. ஒன் வேர்ல்ட்' (UPI One World) என்ற சிறப்பு வசதியை தேசிய இந்தியக் கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக வெளிநாட்டுப் பயணிகள் இந்திய ரூபாய்க்குப் பணத்தை மாற்றிக் கையில் வைத்திருப்பார்கள் அல்லது சர்வதேச கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இனி அவர்கள் ஒரு சாதாரண டீக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எங்கும் க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து நொடிப் பொழுதில் பணம் செலுத்தலாம். இதற்காக கிரெடிட் கார்டு விவரங்களை ஒவ்வொரு முறை உள்ளிட வேண்டியதில்லை. ஆனால் டிஜிட்டல் வாலட்களைப் பயன்படுத்தும் போது, வலுவான கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்துவது அவசியம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
சர்வதேச பயணிகள் இந்தச் சேவையைப் பெற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
* உங்களது செல்போனில் இருந்து பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து 'டிரான்ஸ்கார்ப்'(Transcorp) நிறுவனத்தின் 'CheqUPI' செயலியை பதிவிறக்கம் செய்து இதில் உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
* அதனை தொடர்ந்து உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* செயலியில் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்து உங்களுக்கான பிரத்யேக யுபிஐ பின் எண்ணை உருவாக்க வேண்டும்
* அவ்வளவு தான் சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் உங்கள் வாலட்டில் பணத்தை ஏற்றவும். இப்போது நீங்கள் இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் இதன் மூலம் பணத்தை செலுத்த முடியும்.
பரிவர்த்தனை வரம்பு:
* அதிகபட்சமாக ஒருமுறைக்கு ரூ.25,000 வரை மட்டுமே வாலட்டில் ஏற்ற முடியும். அதேசமயம், ஒரு மாதத்திற்கு மொத்தம் ரூ.50,000 வரை மட்டுமே பயன்படுத்த வரம்பு உண்டு.
* இந்தியாவில் உங்களது பயணம் முடிந்து தாயகம் திரும்பும் போது, வாலட்டில் மீதமுள்ள பணத்தை மீண்டும் அவர்களுடைய பழைய வங்கி கணக்கிற்கே சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.
கடந்த ஜனவரி 2026-ல் மட்டும் யுபிஐ மூலம் 21.70 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ₹28.33 லட்சம் கோடியாகும். இருப்பினும், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்தச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று (பிப்ரவரி 16) முதல் பிப்ரவரி 20-ம்தேதி வரை நடைபெறும் 'இந்தியா ஏ.ஐ. இம்பாக்ட் சமிட் 2026' (India AI Impact Summit 2026)மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்காக இந்த வசதி நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.