
யுபிஐ (UPI) என்பது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) என்பதன் சுருக்கமாகும். இது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மூலம் உடனடியாகப் பணம் அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும். இது கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இந்த யுபிஐ என்ற வங்கி கணக்கில் இருந்து செய்யப்படும் பரிமாற்றத்திற்கு பின் நம்பர், ஓ.டி.பி. போன்ற முறைகள் வழியாக இதுவரை பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இவற்றுக்கு அடுத்த கட்டமாக ஆதார் அடிப்படையிலான முகஅடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த சூழலில் பயனர்களுக்கு யுபிஐ பேமென்ட்டை மேலும் எளிதானதாக மாற்றும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication)இன்றுமுதல் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் நடைமுறை மத்திய அரசுப் பணியாளர்களின் அலுவலக வருகை பதிவு, ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை வழங்குதல் மற்றும் அரசு திட்ட நிதி வழங்குதல் பணி போன்ற அரசுத் துறைகள் மற்றும் நலத்திட்டங்களில் தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் நடைமுறை தற்போது சோதனை அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது உள்ள யுபிஐ பணப்பரிமாற்ற முறையை பயன்படுத்தும் போது மக்கள் PIN-களை உள்ளிட்ட வேண்டி உள்ளது. ஆனால் இனிமேல் மக்கள் யுபிஐ வழியாக பணம் அனுப்பும் போது PIN-களை பதிவு செய்யாமல், முகத்தை கேமராவிற்கு காட்டினால் போதும் பணம் தானாக பரிமாற்றம் செய்யப்பட்டு விடும்.
அதேபோல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது OTP அல்லது PIN நம்பர் கொடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இனிமேல் நமது முகத்தை காட்டினாலே போதும். பணம் தானாக வெளியே வந்து விடும். ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் நடைமுறை வருவதன் மூலம் யுபிஐ பணப்பரிவர்த்தனையை பயனர்கள் விரைவில் மேற்கொள்ள உதவுதுடன், பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ‘முகத்தை காட்டினாலே பணம் பரிமாறும் காலம்’ தொடங்க இருப்பது, மக்கள் வசதிக்கான ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பணப்பரிவர்த்தனையின் போது ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள், தனியுரிமை சிக்கல்கள் போன்ற பல்வேறு சவால்களை சமாளிக்க வலுவான தீர்வுகளையும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றமும், பாதுகாப்பு உத்தரவாதமும் ஒன்றிணைந்தால், இந்த புதிய முறை இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய வரலாற்றுச் சாதனையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.