

ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அந்நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்க்கை ஆகிய இரண்டும், அந்த நாட்டின் எல்லைகளில் எதிரிகள் ஊடுருவாமல் பாதுகாக்கும் ராணுவத்தின் வசமே உள்ளன. நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது, போர்க்காலத்தில் எதிரிகளை எதிர்ப்பது மற்றும் இயற்கை பேரிடர்களில் மக்களுக்கு உதவுவது ஆகியவை ராணுவத்தின் முக்கியப் பணிகளாகும்.
வல்லரசு நாடுகளின் ராணுவத்திற்குச் சற்றும் குறையாத இந்திய ராணுவம்; தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் உலகின் மிகப்பெரிய பாதுகாப்புப் படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எல்லைப் பாதுகாப்பிலும், போர்த்திறனிலும், தைரியத்திலும் உலகளவில் இந்திய ராணுவம் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளது.
1947–1948 ஜம்மு & காஷ்மீரை பாதுகாத்து முக்கிய பகுதிகளை இந்தியா கட்டுப்பாட்டில் வைத்தது,இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ வெற்றிகளில் ஒன்றான 1971 ல் நடைபெற்ற இந்தோ பாகிஸ்தான் போர், 1999 ல் கார்கிலில் ஊடுருவிய எதிரிகளை இந்திய ராணுவம் தோற்கடித்து சிகரங்களை மீட்டது உள்ளிட்ட போர்கள் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வீரத்திற்கான எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது.
தற்போது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தகவல்படி இந்தியா 2025-ஆம் ஆண்டில் $92.1 பில்லியன் (சுமார் ₹7.85 லட்சம் கோடி) ராணுவச் செலவினத்துடன், உலகின் 5-வது அதிக ராணுவச் செலவு செய்யும் நாடாக உயர்ந்துள்ளது , கடந்த ஆண்டை விட இந்தியாவின் செலவினம் 8.9% அதிகரித்துள்ளதாகவும் இது மொத்த உலக ராணுவச் செலவில் 3.2% ஆகும் எனக் குறிப்பிடுகிறது அந்நிறுவனம்.
உலகில் அதிக ராணுவ செலவினங்களில் முதன்மை இடங்களில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் $11.9 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இந்தியாவின் ராணுவச் செலவு அதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவை விட சுமார் 9 மடங்கு அதிகமாகச் செலவு செய்கிறது இந்தியா எனத் தகவல்கள் கூறுகின்றன.
நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு, உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியானது பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதக் கொள்முதலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
SIPRI அறிக்கையின் சமீபத்திய தரவுகள், ராணுவ நவீனமயமாக்கல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியா கொண்டுள்ள தீவிரமான கவனத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த உயர்வு, இந்தியா உலகளாவிய ராணுவத் தளவாட சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுப்பதை உறுதிப்படுத்துகிறது.