

நியூ சண்டிகாரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
இந்த சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கம்பீரமாக வலம் வருகிறது. அதேசமயம், ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி கண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி 4-வது இடத்திலும் நீடிக்கிறது.
மொத்தத்தில் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து பஞ்சாப் பின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 17-ல் ராஜஸ்தானும், 13-ல் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து மெகா இலக்கான 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்த சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக கம்பீரமாக வலம் வந்த பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான் அணி.