

உலகில் காலநிலை அபாயங்ககளை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலகளவில் இந்தியா இதில் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட தீவிர வானிலை சார்ந்த பேரழிவுகளை இந்தியா சந்தித்துள்ளது. கனமழை , புயல் , வெள்ளம் போன்ற அசாதாரண வானிலை நிகழ்வுகளால் நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வானிலை சார்ந்த பேரிடர்களால் குறைந்தது 80,000 உயிர்களை இந்தியா இழந்துள்ளது.அதனுடன் சுமார் $180 பில்லியன் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளது. இது போன்ற சூழல்களில் ஏற்படும் பொருளாதார நிதி சுமைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை அவர்களின் நிதி சுமைகளிலிருந்து மீட்கவும் ,அரசு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்ற காப்பீட்டு திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், அவற்றின் செயல்முறைகள் மிகவும் அதிக காலத்தை எடுப்பதாகவும் , அதிக சான்றுகளை கேட்பதாகவும் இருக்கிறது .
இந்நிலைகளை மாற்ற மத்திய அரசு விரைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தினை செலுத்துவதற்காக நாடு தழுவிய புதிய புதிய காலநிலை காப்பீட்டு திட்டத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் மீதான நிதி அபாயத்தை குறைக்கும் நோக்கத்துடன், நாடு தழுவிய காலநிலை சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த , மத்திய அரசாங்கம் உள்ளூர் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.பாராமெட்ரிக் காப்பீட்டு மாதிரியை மையமாகக் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மிக விரைவாக காப்பிட்டை வழங்க முடியும்.
பாரம்பரிய காப்பீட்டு முறையில் ஏற்படும் இழப்புகளை மதிப்பிடுவதற்கான நீண்ட கால செயல்முறைகள் தேவைப்படும். பாராமெட்ரிக் மாதிரி வேகம் மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முறையில் நிர்ணயிக்கப்பட்ட மழைப்பொழிவு, வெப்பநிலை அல்லது காற்றின் வேகம் போன்ற வானிலை வரம்புகள் மீறப்பட்டால், பாலிசிதாரர்களுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இழப்பீடு உடனடியாக வழங்கப்படும்.
இந்த காப்பீடு முறை இந்தியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் காப்பீட்டை வழங்குவதை விரைவானதாக மாற்றும். இதற்கு முன் இந்தப் பகுதிகளில் இழப்பு மதிப்பீடு முறைகள் கணக்கெடுக்கப்பபடுவதில் நிறைந்துள்ள சவால்கள் குறைக்கப்படும். தற்போது பேரிடர் நிவாரண நிதிகள் நேரடியாக காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட உள்ளதால் , இதனால் மத்திய நிதி அமைச்சகத்திற்கு சுமை ஏற்படாது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிதி அமைச்சகம் மற்றும் இந்தியாவின் உயர் காப்பீட்டு நிறுவனங்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றன.இந்த பேரிடர் காப்பீட்டு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான சாத்தியமான வழிகள் ஆராயப்படுகின்றன, இந்த காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை செலுத்த தற்போதுள்ள பேரிடர் நிதியைப் பயன்படுத்துதல் அல்லது பயன்பாட்டுக் கட்டணங்களில் ஒரு சிறிய வரியைச் சேர்ப்பது ஆகிவற்றை பற்றி ஆலோசனைகள் நடந்து வருகின்றது.
இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது ,வானிலை சார்ந்த காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஏற்கனவே பல மாநிலங்கள் பாராமெட்ரிக் திட்டங்களை செயல்படுத்தியுள்ளன,
கடந்த ஆண்டு, மே 18 முதல் மே 25 வரை ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வெப்பநிலை 40°C ஐத் தாண்டிய போது, சுயதொழில் செய்யும் 50,000 பெண்கள் இழப்பீடுகளைப் பெற்றனர்.
காலநிலை காப்பீடு என்றால் வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் , புயல்கள் மற்றும் சூறாவளி போன்ற காலநிலை மாற்றத்தோடு தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளிலிருந்து தனிநபர்கள் மற்றும் வணிகங்களை பாதுகாக்க வடிவமைக்கப்படும் காப்பீடு.
எப்படி செயல்படும்:
இதன்படி கனமழை , அதிக வெப்ப நிலை அல்லது பலத்த சூறாவளி காற்று போன்று குறிப்பிட்ட வானிலை நிலைமைகள் ஏற்படும் போது தானாகவே காப்பீடு பெற்ற மக்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விடும் . இந்த காப்பீட்டு முறையில் நாம் கிளைம் விண்ணப்பம் செய்ய தேவையில்லை. இயற்கை இடர்கள் ஏற்பட்ட உடனேயே பணம் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.