
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு உலகநாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. சமீபகாலமாக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா முன்னேறி வருவதாக ஐநா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடப்பு நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், இந்தாண்டில் உலகின் மிக விரைவான வளர்ச்சியின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் கூறியது.
ஐ.நா.நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் காட்டும் முன்னேற்றம் குறித்து கடந்த 10-வது ஆண்டாக, உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
பத்திரிகை சுதந்திரம், நிலையான நைட்ரஜன் மேலாண்மை, ஊழல் உணர்வு குறியீட்டு எண், பருவநிலை, பல்லுயிர் பெருக்கம், அடிப்படை சேவைகள் பெறும் வசதி, மின்சாரம் பெறும் வசதி, செல்போன் அகண்ட அலைவரிசை பயன்பாடு, இணையதள பயன்பாடு உள்ளிட்ட 17 இலக்குகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பட்டியலிடப்பட்டு இவற்றில் எந்த நாடுகள் இலக்குகளை எட்டியுள்ளது என்பதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு வரிசைப்படுத்தப்படுகின்றன.
மேலே கூறப்பட்டுள்ள இலக்குகளின் அடிப்படையில் 100 புள்ளிகளை பெற்ற நாடு 17 இலக்குகளையும் எட்டி விட்டதாக அர்த்தம். ஆனால் இலக்கை அடையவில்லை என்றால் பூஜ்யம் என்று கணக்கில் கொள்ளப்படும்.
இந்த பட்டியலில் மொத்தம் 167 நாடுகள் உள்ள நிலையில், முதல் முறையாக இந்தியா 100 முன்னணி நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 109-வது இடத்தில் இருந்த நிலையில் இந்தாண்டு 67 புள்ளிகளுடன் 99-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் பின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. அதுமட்டுமின்றி முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில், 19 நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சீனா 49-வது இடத்திலும், அமெரிக்கா 44-வது இடத்திலும், மாலத்தீவு 53-வது இடத்திலும் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அனைத்திலும் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் 140-வது இடத்தையும், இலங்கை 93-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருந்தாலும், நாட்டின் முன்னேற்றம் தொடர, சவால்களை எதிர்கொண்டு, நிலையான வளர்ச்சியை அடைய அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.