பிரதமர் மோடியின் கோரிக்கையையும் மீறி எகிறிய தங்க இறக்குமதி: மே மாத அதிரடி புள்ளிவிவரம்..!

சுங்க வரி 15% ஆக உயர்த்தப்பட்டும் குறையாத இந்தியர்களின் தங்கம் வாங்கும் ஆர்வம்!
தங்க இறக்குமதி
தங்க இறக்குமதி
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதிலும் தங்கம் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்து வருவதாக தகவல் கூறுகின்றன.

தங்கத்தின் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளதாகவும் அதேசமயம் வெள்ளி இறக்குமதி 86.65 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகரித்திருப்பது குறித்த இந்த அதிரடி தகவல்கள் பொருளாதார வல்லுநர்களின் கவனத்தை மட்டுமல்ல பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாகவே உலக அளவில் தங்கத்தை விரும்பும் மக்கள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர் என்கிறது ஆய்வுகள். அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த செய்தி. தங்கத்தின் மீதான அதிக முதலீட்டு ஆர்வம், தங்க ETF-களில் முதலீடு அதிகரித்தது, திருமணம் மற்றும் ஆபரணத் தேவை போன்ற காரணங்களால் விலை ஏற்றம் மற்றும் வரி அதிகம் இருந்தாலும் தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் சுமார் 40% சுவிட்சர்லாந்தில் இருந்தும், 16%-க்கும் மேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் வருவதாக கூறப்படுகிறது. இந்த தங்க இறக்குமதியின் உயர்வு பொருளாதார ரீதியாக கவலை தரும் விஷயமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.ஏனெனில் தங்கம் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதிக இறக்குமதி இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும் வாய்ப்பையும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது அழுத்தமும் ஏற்படலாம் என்றும் அதனால் ரூபாயின் மதிப்பிலும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்புகள் கூறுகிறது.

இதன் காரணமாகவே தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. ஒன்றிய அரசு 2026 மே மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி சுங்க வரியை 6% இலிருந்து 15% ஆக உயர்த்தியது. மேலும் சில இறக்குமதி விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் பொதுமக்கள் யாரும் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதும் அப்போது பேசப்பட்டது.

இருப்பினும் அரசு ஏதிர்பார்த்தது போல் இந்தியர்களின் தங்கத் தேவை முழுமையாக குறையவில்லை. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதும், நாட்டின் வலுவான உள்நாட்டுத் தேவையும் அரசு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் இறக்குமதி உயரக் காரணமாக அமைந்தது.

gold price
gold priceimage credit-dailynewsegypt.com

மேலும் மக்களிடம் தங்கம் சேமிப்பு, முதலீடு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட சொத்தாக கருதப்படுவதால் இறக்குமதி தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தங்கத்தின் விலை கடந்த இரு ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. காரணம் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதாலும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைவதால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருவதும் விலையை உயர்த்தும் காரணமாக உள்ளது. மேலும் இந்திய அரசு தங்க இறக்குமதி சுங்க வரியை உயர்த்தியதால் உள்நாட்டு சந்தையில் தங்கம் மேலும் விலை உயர்ந்துள்ளது.

இவ்வளவு காரணங்களால் விலை ஏற்றம் தொடர்ந்து இருந்து வந்தாலும் இந்தியாவில் திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் முதலீட்டு தேவையால் தங்கத்திற்கான தேவை அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை மிக அதிகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.மறுபுறம், கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளியின் இறக்குமதி. இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் சரிந்துள்ளது. இது சுமார் 87 சதவீதம் வீழ்ச்சியைக் குறிக்கிறது.இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் மத்திய அரசின் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள்தான்.

மேலும் இந்தியாவில் தங்கத்தை மக்கள் தங்கள் அந்தஸ்தை நிர்ணயிக்கும் விதமாகவே கையாளுகின்றனர் என்பதும் தங்கத்தின் இறக்குமதி உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி தங்கம் வேண்டாம்.. நிலம் கொடுங்க..! தமிழகத்தில் பரவும் ‘புதிய கலாச்சாரம்’..!
தங்க இறக்குமதி
logo
Kalki Online
kalkionline.com