

இந்தியாவில் வரதட்சணை சட்டப்படி குற்றம் என்றாலும், தமிழக பாரம்பரியப்படி திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு தாய் வீட்டில் இருந்து சீதனமாக நகை மற்றும் பணம் கொடுப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியத் திருமணங்கள் அவற்றின் பிரம்மாண்டம், சடங்குகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளுக்காகப் பெயர் பெற்றவை. மேலும் இந்தக் கொண்டாட்டங்களின் மையத்தில் தங்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மணப்பெண் கழுத்தணிகள் முதல் பரம்பரை வளையல்கள் வரை, தங்க நகைகள் ஏறக்குறைய ஒவ்வொரு இந்தியத் திருமண விழாவிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. மாறிவரும் ஃபேஷன் போக்குகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகள் இருந்தபோதிலும், இந்தியத் திருமணங்களில் தங்கம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நவீன திருமணங்கள் எளிமையாகி வரும் வேளையில், மணப்பெண்களுக்கான தங்க நகைகள் பாரம்பரியம் மற்றும் குடும்ப கௌரவத்தின் சின்னமாகத் திகழ்கின்றன.
இந்து பாரம்பரியத்தில், தங்கம் செழிப்பின் சின்னமாக விளங்குகிறது மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ஒரு மணமகள் தங்க நகைகளை அணிந்து தனது புதிய வீட்டிற்குள் நுழையும்போது, அவள் ஆசீர்வாதங்களையும், செல்வச் செழிப்பையும், நிதி நிலைத்தன்மையையும் கொண்டு வருகிறாள் என்று குடும்பத்தினர் நம்புகிறார்கள்.
அடையாளப்பூர்வமாக மட்டுமல்லாமல், தங்கம் மணமகளுக்கு நிதிப் பாதுகாப்பாகவும் விளங்குகிறது. வரலாற்று ரீதியாக, அவசர காலங்களில் பெண்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட செல்வத்தின் வடிவமாக தங்கம் வழங்கப்பட்டது. பாரம்பரியம், உணர்வுப்பூர்வமான மதிப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டு சாத்தியம் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, தங்கத்தை இந்தியத் திருமணச் சடங்குகளின் ஒரு இன்றியமையாத அங்கமாக ஆக்குகிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வரும் சூழ்நிலையில் தமிழகத்தின் பல நடுத்தர குடும்பங்கள் இன்று புதிய எதார்த்தத்திற்கு மாறியுள்ளனர்.
அதாவது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக தங்க நகைகளை சேர்த்து வைப்பதற்கு பதிலாக தங்களிடம் இருக்கும் நிலம், வீடு, காலி மனை போன்ற சொத்துக்களை மகள்களின் பெயரில் எழுதி கொடுக்கும் புதிய கலாச்சாரம் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.
உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே அதிக தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் சுமார் 40 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களிலேயே நடைபெறுகிறது. அதிலும் அதிக தங்கம் வாங்கப்படும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சாரசரியாக 150 டன் வரை தங்கம் விற்பனையாகிறது. இதில் 70 முதல் 80 சதவீதம் தங்கம் திருமணங்களுக்காகவே வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
உதாரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தந்தை தனது மகளின் திருமணத்திற்கு ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தால், ஒரு பவுன் தங்கம் ரூ.50000 என்ற விலையில் 10 பவுன் நகையை வாங்க முடிந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் அதே ரூ.5 லட்சத்தில் 4 பவுன் நகையை கூட முழுமையாக வாங்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கஷ்டம் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளின் திருமணத்திற்காக அவள் சிறு வயது முதலே சிறுக சிறுக பணம் சேமித்து வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தபால் நிலையம், வங்கி, காப்பீடு திட்டங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இந்த சேமிப்பு நடைபெறுகிறது.
தமிழக திருமணங்களில் மணமகளின் வசதிக்கேற்ப குறைந்தபட்சம் சில சவரன் தங்க நகைகளையாவது அணிவித்து அனுப்புவது நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களில் தங்கம் விலை கண்டிராத உயர்வை எட்டியதால் சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நகை வாங்குவதே பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதனால் திருமண மேடையில் தங்கம் ஜொலிப்பதை விட மகளின் பெயரில் இருக்கும் நிலமோ, வீட்டு சொத்தோ அவளது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் வழங்கும் என்ற எண்ணம் தற்போது பெற்றோர்களிடையே வலுப்பெற்று வருகிறது.
நகை என்பது காலப்போக்கில் கரையக்கூடிய சொத்து. ஆனால் நிலம் என்பது தலைமுறைகளை தாண்டி மதிப்பு உயரக்கூடிய சொத்து. இந்த புரிதலே பல குடும்பங்களை புதிய முடிவுக்கு வழிநடத்துகிறது. அந்த வகையில் மணமகளுக்குத் தங்கத்திற்குப் பதிலாக நிலத்தைச் சீதனமாக (சொத்தாக) வழங்குவது என்பது எதிர்காலப் பாதுகாப்பிற்கு மிகச் சிறந்த மற்றும் முற்போக்கான முடிவு என்றே பலரும் கருகின்றனர்.
தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைக் கொண்டது என்றாலும், நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு காலப்போக்கில் நிலையான மற்றும் பல மடங்கு அதிக மதிப்பைத் தரும். மேலும் நிலத்தை மணமகளின் பெயரிலேயே நேரடியாகப் பதிவு செய்வது நல்லது. திருமணத்திற்குப் பிறகு வாங்கப்படும் சொத்துக்கள் 'ஸ்ட்ரீதன்' (Stridhan) எனப்படும் பெண்களின் தனிப்பட்ட சொத்துக்களின் கீழ் பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால் இங்கேதான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
நிலம், வீடு, காலி மனை போன்ற சொத்துக்கள் கைவசம் உள்ள பெற்றோர்கள் இவ்வாறு மாற்று வழியை தேர்ந்தேடுக்கலாம். ஆனால் சொத்தே இல்லாத மாத வருமானத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் என்ன செய்வார்கள்? தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால் அவர்களின் மகள்களின் திருமண கனவுகளுக்கு யார் பதில் செல்வார்கள்?