
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப்பிரிவு நடை முறைகளை எளிதாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு ஏதுவாக இ-அரைவல் கார்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-அரைவல் அட்டையை பெற விரும்புபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளம், சு-சுவாகதம் என்ற கைப்பேசி செயலி, இந்திய விசா ஆன்-லைன் இணையதளம் ஆகியவற்றின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பயணம் செய்பவரின் விமானம் வெளி நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள்ளாக இ--அரைவல் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் இது விசா கிடையாது. சுற்றுலா, வணிகம், படிப்புக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக விசா பெற்றுதான் பயணிக்க வேண்டும். இந்த இ-அரைவல் அட்டை பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக தேவைப்படும் ஒரு அனுமதிச் சீட்டாக மட்டுமே கருதப்படும் என்பதை பயணிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரும் விமான நிலையத்திலேயே ‘Arrival Form’ என்ற படிவத்தை கையால் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இனி இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட உள்ளன. இ-வருகை அட்டை முறையில் பயணிகள் பின்வரும் விவரங்களை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவேற்ற முடியும்:
பாஸ்போர்ட் எண்
நாட்டுப்பற்று
இந்தியா வருகை நோக்கம் (சுற்றுலா, தொழில், வேலை, கல்வி போன்றவை)
தங்கும் இடம் மற்றும் முகவரி
தொடர்பு கொள்ளக்கூடிய மொபைல் எண்
இந்த விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் சேமிக்கப்படுவதால், விமான நிலையத்தில் நேரம் வீணாவதை தவிர்க்கலாம்.
யாருக்கு தேவையில்லை?
இந்த இ-வருகை அட்டை என்பது இந்திய குடிமக்கள் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தேவையில்லை. இது முழுமையாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.