
உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் , அதன் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை தாண்டி உள்ளது. இது உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.
ஜூன் 10 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் 146 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டின் கருவுறுதல் முன்பை விட சிறிய அளவில் குறைந்துள்ளது . இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 2.1% லிருந்து 1.9 % ஆகக் குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை புள்ளி விவரங்கள் அறிக்கையின் படி , உண்மையில் மக்கள் தொகை நெருக்கடி எங்கும் இல்லை. ஆனால் , இப்போது மக்களின் மனது பெருமளவில் மாறியுள்ளது. அவர்கள் தற்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ள மிகவும் யோசனை செய்கின்றனர்.
குழந்தைகளை தற்போது பெற்றுக் கொள்ளலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா ? என்று நீண்ட கால யோசனையில் உள்ளனர். மேலும் அப்படியே குழந்தைகளை பெற விரும்பினாலும் அது குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். ஐநா சபை அறிக்கையின் படி இந்தியாவின் மக்கள் தொகை 146.39 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.
இந்த எண்ணிக்கை இந்தியாவில் குறையும் முன், எதிர்காலத்தில் 1.7 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாக உயரும். மேலும் நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் இப்போது ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. தற்போதைய புதிய அறிக்கையில் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைகளாகக் குறைந்துள்ளது.
பிறப்பு விகிதம் குறைந்த போதிலும் இந்தியாவில் இளைஞர் மக்கள் தொகை போதுமானதாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 0-14 வயதுக்கு உட்பட்டவர்கள் 24 % ஆகவும் , 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 17 % ஆகவும் மற்றும் 10-24 வயதுக்கு உட்பட்டவர்கள் 26% பேரும் உள்ளனர். மக்கள் தொகையில் 68% பேர் 15-64 வயதுக்குள் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7% பேர் உள்ளனர்.
79 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 74 வயதாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.1970 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற அளவில் இருந்த கருவுறுதல் விகிதம், இன்று 2 குழந்தைகளாகக் குறைந்ததில் இந்தியா முன்னேறியுள்ளது. இதற்கு கல்வி முறையும், எச்சரிக்கை உணர்வும் ஒரு காரணமாகும். இதன் மூலம் பிரசவத்தில் தாய்மார்கள் இறக்கும் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது.