
காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது போரை நடத்தும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கிறது . பாகிஸ்தான் தரப்போ பதட்டத்தில் தினசரி ஏதேனும் ஏவுகணையை சோதனை செய்து, உலக அரங்கில் தான் ஒரு ஆயுத வலிமை மிக்க நாடு என்பதை காட்ட, இந்தியா, நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து பெரிய அடியை கொடுக்க தயாராகிவிட்டது.
பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் வழிகளை அடைப்பதன் மூலம், அந்த நாட்டின் எதிர்காலத்தை இந்தியா கேள்வி குறியாக்கி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் "நாங்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்" என்று தொடர்ச்சியாக இந்தியாவை மிரட்டி கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு பதிலடியாக இந்தியா "எங்களிடம் இருப்பது தீபாவளி வெடிகள் அல்ல, எங்களிடமும் அணுகுண்டுகள் உள்ளன" என்று இடித்துக் காட்டியுள்ளது.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக அணு ஆயுதப் போர் பற்றி பேசி உலக நாடுகளை மிரட்டி இந்தியாவை சமாதானம் செய்ய வைக்க நினைக்கிறது. ஆனால், இங்கே பெரிய டிவிஸ்ட் இருக்கிறது. அமெரிக்காவை தவிர எந்த ஒரு நாடும் பாகிஸ்தான் பேச்சை கண்டு கொள்ளவே இல்லை. அணு ஆயுதப் போர் வரும் என்று எந்த கவலையும் அவர்கள் படவில்லை.
வரலாற்று ரீதியாக பார்த்தாலும் இந்தியா - பாகிஸ்தான் போரில் இழப்புகள் மற்ற நாட்டு போர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. அதனால், உலக நாடுகளின் கவனம் முழுக்க அதிக இழப்புக்களைக் கொண்ட இஸ்ரேல் - காசா போர் மீது தான் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து ரஷ்யா - உக்ரைன் போரில் தான் கவனம் செலுத்துகின்றனர்.
1971ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய இந்திய பாகிஸ்தான் போரில் கூட, போரில் இந்தியாவிடம் சரணடைந்த 90,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்தியா விடுவித்தது. அப்போது இந்தியாவின் பெருந்தன்மையை பார்த்து உலகமே வியந்தது.
1999 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கார்கில் போர் நிகழ்ந்தது. அக்காலக் கட்டத்தில் கூட இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் அணு குண்டுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் போரில் துப்பாக்கிகளும், பீரங்கிகளும், சிறிய தாக்குதல் நடத்தும் விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
அப்போதும் பாகிஸ்தான் அணுகுண்டு பூச்சாண்டியை காட்டியது. அப்போது இந்தியா "முதல் அணுகுண்டை நாங்கள் எப்போதும் வீச மாட்டோம், ஒரு வேளை எங்கள் நாட்டில் அணுகுண்டு வீசப்பட்டால் எதிரி நாடு உலக வரைபடத்தில் இருக்காது," என்று எச்சரித்தது. எப்போதும் முதலில் இந்தியா ஆயுதம் எடுக்காது என்பதே நீண்ட கால கொள்கையாக உள்ளது.
பாகிஸ்தான் நாடும் அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பு கிடையாது. உலகம் முழுக்க அணு ஆயுத போரை எந்த நாடும் ஆதரிப்பது இல்லை. இந்தியா முதல் தர பொருளாதார நாடாகவும், ஆயுத வல்லரசாகவும் தர நிலையில் உள்ளது. பாகிஸ்தான் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் உலகில் பலநாடுகளின் உதவியை நம்பி தான் வாழ்வதால், கற்பனையில் கூட அவர்கள் அணு ஆயுதத்தை எடுக்க முடியாது. அவர்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை இந்தியாவும் எடுக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.