
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் இன்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த இந்தத் தாக்குதலில் சுமார் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் அங்கமான தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில், தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியத் தரப்பில் இருந்து உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இன்று (மே 7) 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் (PoK) பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது இலக்குகளை இந்தியப் படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் குறித்த செய்திகள் வெளியானதும் பாகிஸ்தான் தரப்பு உடனடியாக எதிர்வினையாற்றியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஏவுகணைகள் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாண எல்லைப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். குறிப்பாக, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இருக்கும் முசாபராபாத் நகரின் பழைய விமான நிலையப் பகுதியிலும் ஒரு ஏவுகணை விழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாகவும், 35க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது 'துல்லியமான தாக்குதல்கள்' நடத்தப்பட்டதாக இந்தியத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் அதிகரித்து வந்த எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதல் பாகிஸ்தான் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் அந்நாட்டுத் தரப்பு ஆவேசமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. இந்தப் பதிலடி நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.