இந்தியா-பங்களாதேஷ் உறவில் புதிய மைல்கல்..!பங்களாதேஷுக்கு செல்லும் இந்திய ரயில் பெட்டிகள்!

இந்தியா - பங்களாதேஷ் உறவில் புதிய மைல்கல்!: கபூர்தலா RCF தயாரித்த 19 அதிநவீன எல்ஹெச்பி (LHB) ரயில் பெட்டிகள் ஒப்படைப்பு!
பங்களாதேஷிற்கு இந்திய ரயில் பெட்டிகள்
பங்களாதேஷிற்கு இந்திய ரயில் பெட்டிகள்source:NDTV
Updated on

இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையேயான உறவை மேலும் வலுபடுத்தியது நம்முடைய இந்திய இரயில் துறை.

இந்தியாவிலிருந்து 200 அகல இருப்புப்பாதைகளுக்கான ரயில் பெட்டிகளை பங்களாதேஷிற்கு இறக்குமதி செய்ய தயாராக உள்ளது இந்திய ரயில்வே துறை. அதன் முதல் தொகுதி நேற்று அதாவது புதன்கிழமை முடிவடைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில்வே ஒத்துழைப்பில் ஒரு புதிய படியை குறிக்கும் வகையில், பஞ்சாபின் கபூர்தலாவில் உள்ள இந்தியாவின் ரயில் பெட்டி தொழிற்சாலை (RCF), பங்களாதேஷ் ரயில்வேக்காக 19 நவீன லிங்கே ஹோஃப்மேன் புஷ் (LHB) அகலப்பாதை பயணிகள் பெட்டிகளின் முதல் தொகுதியை நேற்று, அதாவது புதன்கிழமை அன்று வெளியிட்டது.

இந்த முதல் தொடர்வண்டி தொடரில் மூன்று குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மூன்று குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 11 குளிரூட்டப்படாத இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டு மின்சாரப் பெட்டிகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தப் பெட்டிகள் பங்களாதேஷின் இயக்க நிலைமைகள் மற்றும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிகிறது.

துருப்பிடிக்காத எஃகு கைப்பிடிகள் மற்றும் கால் தாங்கிகளுடன் கூடிய சாய்வு இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், அவசரகால எச்சரிக்கை அமைப்புகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் கூடுதல் மின்விசிறிகள், மேம்படுத்தப்பட்ட ஜன்னல்கள், பிரத்யேகமான தொழுகை அறை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

இதைத் தவிர, நம்முடைய RCF பொறியாளர்கள் பல தொழில்நுட்ப மாற்றங்களையும் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பண்டிகைக் காலங்கள் மற்றும் உச்ச பயண நேரங்களில் அதிக பயணிகள் சுமையைத் தாங்கும் வகையில் கூரையின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், விபத்து ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் குறைக்கும் நோக்கில், மோதலைத் தாங்கும் தொழில்நுட்பத்துடன் ஐரோப்பிய பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

பங்களாதேஷ் ரயில்வேயின் மின்சார உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு, மின்சார அமைப்பும் இந்திய ரயில்வேயின் தரநிலையான 750 வோல்ட்டிலிருந்து 415 வோல்ட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

RCF நிறுவனம் முன்னதாக 2015-16 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ரயில்வேக்கு 120 பயணிகள் பெட்டிகளை வழங்கியிருந்தது.

பங்களாதேஷிற்கு இந்திய ரயில் பெட்டிகள்
பங்களாதேஷிற்கு இந்திய ரயில் பெட்டிகள்SOURCE:TWITTER

2024-ல் வழங்கப்பட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், பங்களாதேஷ் ரயில்வே இந்தியப் பொறியியல் ஆலோசனை நிறுவனமான RITES மூலம் 200 பெட்டிகளை கேட்டுள்ளது. புதன்கிழமை அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 19 பெட்டிகள், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் முதல் தொகுதியாகும்.

ரூ.915 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், 200 பெட்டிகளை வழங்கும் பணி டிசம்பர் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, புதிய பெட்டிகள் ஜூன் 2026 முதல் டிசம்பர் 2027-க்குள், பழைமையான பங்களாதேஷ் இரயில்வே தொகுப்பில் இணைக்கப்படலாம் என நம்பப் படுகிறது.

நம்முடைய இந்திய தேசம் தன்னுடைய கிழக்கு அண்டை நாட்டிற்கு ரயில் பெட்டிகளையும் தொழில்நுட்ப ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான வளர்ந்து வரும் ரயில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை இந்த நிகழ்வானது மேலும் வலுப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு ஜாக்பாட்: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி கடன் வழங்கும் புதிய திட்டம்! யாருக்கு கிடைக்கும்?
பங்களாதேஷிற்கு இந்திய ரயில் பெட்டிகள்
logo
Kalki Online
kalkionline.com