இந்தியா கார்கில் போரின்போது செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தின் உதவியின் மூலம் பாகிஸ்தானை வென்றது. அப்போது வரைப்படம் சார்ந்த அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் செய்து கொடுத்தது. அதன் பிறகு இந்தியா செயற்கைக்கோள் முக்கியத்துவத்தை உணர்ந்தது. தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா மிகவும் துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் தவிர எந்த அப்பாவிகளும் பாதிக்கப்படவில்லை. இந்த துல்லிய தாக்குதலுக்கு உளவுத்துறை செயல்பாடுகளும் செயற்கைக் கோள் வழிகாட்டிகளும் முக்கிய பங்கு வகித்தன.
இந்தியா பாகிஸ்தானை தாக்கும் முன்னர், அவர்களின் ரேடார்களை 22 நிமிடங்கள் முடக்கியிருந்தது இந்தியா. இதற்காக மேம்படுத்தப்பட்ட சிக்னல் ஜாமிங் தொழில் நுட்பத்தினை இந்தியா பயன்படுத்தி இருந்தது. இந்த 22 நிமிடங்களில் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்களை ஏவுகணை தாக்குதல் மூலம் இந்தியா அழித்தது. பயங்கரவாத முகாம்களின் இருப்பிடங்களை இந்தியா செயற்கைகோள் மூலம் கண்டறிந்தது. பயங்கரவாத முகாம்களின் இருப்பிடமும், உள்ளவுத்துறை மூலம் பெறப்பட்ட தரவுகளையும் ஒப்பிட்டு , செயற்கைக் கோள் மூலம் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த , ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் இருப்பிடங்களை பற்றிய துல்லியமான தகவல்களை உளவுத்துறையின் மூலம் இந்தியா பெற்றது. அந்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர், முசாபராபாத், கோட்லி மற்றும் சியால்கோட் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.
தற்போது எதிரி நாட்டுப் பகுதிகளை 52 உளவு செயற்கைக் கோள்களை ஏவி இந்தியா கண்காணிக்க உள்ளது. இதன்மூலம் தெற்காசியா மற்றும் உலகின் பல பகுதிகளையும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்தியா கண்காணிக்க முடியும். தேவைப்பட்டால், இந்தியா இந்த செயற்கைக்கோள்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். இதற்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா ரூ.26,968 கோடியை ஒதுக்கியது. இந்தத் திட்டத்தில் இஸ்ரோவின் 21 செயற்கைக் கோள்களும், மூன்று தனியார் நிறுவனங்களின் 31 செயற்கைக் கோள்களும் அடங்கும்.
இந்த திட்டத்தின்படி முதல் செயற்கைக்கோள் 2026 இல் ஏவப்படும் என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் இறுதி செயற்கைக்கோள் 2029 இல் ஏவப்படும். இந்தத் திட்டத்தைப் பாதுகாப்பு அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இந்த செயற்கைக்கோள்களின் வலையமைப்பின் மூலம் சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்ற நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் கண்டறிய முடியும்.