விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி..! இனி வாகனங்களே பேசிக்கொள்ளும் V2V தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்..!

v2v technology
v2v technologysource:thefinancialexpress
Published on

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 2026-ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 'வாகனம் முதல் வாகனம் வரை' (Vehicle to Vehicle - V2V) என்ற மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:

நேரடி எச்சரிக்கை: சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றோடொன்று தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும். இதன் மூலம் அருகில் வரும் வாகனத்தின் வேகம், அதன் துல்லியமான இருப்பிடம் மற்றும் திசை குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும்.

விபத்துத் தடுப்பு: வளைவுகளிலோ அல்லது மூடுபனி போன்ற பார்வைத்திறன் குறைவான நேரங்களிலோ மற்ற வாகனங்கள் குறித்த எச்சரிக்கையைத் தருவதன் மூலம் சாலை விபத்துகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

போக்குவரத்து மேலாண்மை: வாகனங்கள் சீரான இடைவெளியில் இயங்குவதை உறுதி செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

V2V என்பது வாகனங்கள் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒரு வயர்லெஸ் தொழில்நுட்பம். வாகனங்களில் பொருத்தப்படும் ஒரு கருவி(SIM கார்டு போன்றது) மூலம், அருகிலுள்ள பிற வாகனங்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும். ஒரு வாகனம் மிக அருகில் வரும்போது அல்லது சாலையில் உள்ள மற்ற வாகனங்கள் குறித்து நிகழ்நேர எச்சரிக்கைகளை வழங்கும். இதன் மூலம் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டு விபத்துக்களை தடுக்க உதவும். இந்த தகவல் தொடர்பு அனைத்து திசைகளிலும் செயல்பட்டு, சுற்றியுள்ள போக்குவரத்து நிலைமைகள் குறித்த 360 டிகிரி விழிப்புணர்வை வழங்குகிறது.

குளிர்கால மாதங்களில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்பு விபத்துகளுக்குக் காரணமான அடர்ந்த மூடுபனியின் போது, பல வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாவதை (Pile-up) இந்தத் தொழில்நுட்பம் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிமூட்டம் போன்ற நேரங்களில் பார்வைத் திறன் குறைவாக இருக்கும்பொழுது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; மேலும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்கவும் உதவும்.இந்தத் தொழில்நுட்பத்தை முதற்கட்டமாகப் புதிய வாகனங்களில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலில் புதிய வாகனங்களில் இந்தச் சாதனம் நிறுவப்பட்டு, பின்பு படிப்படியாக மற்ற வாகனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காகத் தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து, V2V தகவல் தொடர்புக்காக 5.875 - 5.905 GHz அலைவரிசையில் 30 MHz ஸ்பெக்ட்ரத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

2026ன் இறுதிக்குள் இதை அறிவித்து, நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நவீன நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பின் (Intelligent Transport System - ITS) ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த V2V தொழில்நுட்பம், இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைத்து, ஒட்டுமொத்தப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு புது சட்டத்திருத்தம்..! இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது..!
v2v technology

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com