

தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்தியாவில் அரசுத்துறையை சேர்ந்தவர்கள் லஞ்சம் வாங்கி மாட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் செய்தித்தாளை திறந்தால் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை பற்றிய செய்திகள் இல்லாமல் இருக்கவே இருக்காது.
பொதுவாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியர் மீது FIR போட, பிரிவு 17A-ன் படி அரசின் முன் அனுமதி தேவையாகும். ஆனால், அதே சமயம் ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டால் அப்போது அரசின் முன் அனுமதி தேவை இல்லை.
போலீசார் உடனடியாகக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியை கைது செய்து விசாரணையை தொடங்க முடியுமே தவிர, அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோ அல்லது வழக்கு நடத்தவோ முடியாது.
ஏனெனில் கைது செய்த பிறகு, அந்த அரசு அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்ய பிரிவு 19-ன் படி அரசின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் அரசிடம் இருந்து இந்த அனுமதி கிடைக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளில் அனுமதி கிடைப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின்படி, அரசிடம் இருந்து இந்த அனுமதிகோரும் விண்ணப்பத்தின் மீது 4 மாதங்களுக்குள் அதாவது 120 நாட்களுக்குள் அரசு அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ இல்லை என்றால், அந்த அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இதன் பிறகு நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
தெளிவாக சொல்லவேண்டுமானால், 120 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோரிக்கை மீது அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றால், அந்த அதிகாரிக்கு எதிரான வழக்குத் தொடர அரசு அனுமதி அளித்துவிட்டதாக கருதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் இனிமேல் நீதிமன்றத்தில் நேரடியாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியும்.
அதேபோல் அரசிடம் போதிய ஆதாரங்கள் இருந்தும் அனுமதி அளிக்க மறுத்தாலோ, அரசின் மறுப்பு ஆணை உண்மைகளை மறைப்பதாக இருந்தாலோ, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கும் போது பிடிபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சேகரிக்கும் ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள், ரசாயனச் சோதனை போன்ற அறிவியல் பூர்வமான வலுவான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அரசு அனுமதி மறுத்தால் அது நீதிமன்றத்தில் செல்லாது. மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இனிமேல் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் வாழ்நாள் முழுவதும் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.