

10-வது டி20 உலகக்கோப்பைத் தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்தத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது.
இம்முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா நடக்காதா என்ற கேள்வி தான் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடாது என அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனால் ஐசிசி-க்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி உலகக்கோப்பைக்கு அவசியம் என்பதாலும் ஐசிசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் அணி 5 நிபந்தனைகளை ஐசிசிக்கு விதித்தது. அதில் 3-ஐ நிராகரித்த ஐசிசி, பாகிஸ்தான் அணிக்கு 24 மணி நேரம் கெடுவும் அளித்தது. அதன் பிறகு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகங்களுடன் ஐசிசி-யும் இணைந்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கிரிக்கெட் உறவை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடும் என அந்நாட்டு பிரதமர் ஷெஃபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இரு தரப்பு தொடர் மற்றும் முத்தரப்பு தொடரில் இந்தியா விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த தொடர் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா வங்கதேசத்திற்கு சென்று விளையாட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்தது.
பாகிஸ்தானின் கோரிக்கைகள் ஐசிசி அதிகார வரம்புக்குள் உட்படவில்லை என்பதால் தான் அவை நிராகரிக்கப்பட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானிற்கு ஐசிசி தரப்பில் நெருக்கடி தரப்பட்ட நிலையில், இந்தியாவுடன் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என பங்களாதேஷ் அறிவித்த நிலையில், அந்நாட்டுக்கு பதிலாக ஸ்காட்லாந்து இந்த தொடரில் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி உலகக்கோப்பையில் விளையாடாதது வருந்தத்தக்க விஷயம் என ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வங்கதேசத்திற்கு நிர்வாகத் தடையோ அல்லது அபராதமோ விதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை நடைபெற இருக்கும் சூழலில், 2031 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பைக்கு முன்பாக, வங்கதேசத்தில் ஒரு ஐசிசி தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.