ஒட்டகத் திருவிழா
ஒட்டகத் திருவிழா

பாலைவனக் கப்பல் இல்லாத ஒட்டகத் திருவிழா! 

-ஜி.எஸ்.எஸ்.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் இருக்கிறது புஷ்கர்.  இந்த சிறு நகரத்தின் பெயரைக் கூறியதும் சிலருக்கு அங்கு பிரம்மாவுக்கு தனிக் கோயில் இருப்பது நினைவுக்கு வரும்.  எனினும் சுற்றுலாப்பயணிகளுக்கு அங்கு ஆண்டுதோறும் நடக்கும் வேறொரு தனித்தன்மை கொண்ட ​திருவிழா நினைவுக்கு வரும்.  அது ஒட்டகத் திருவிழா.  ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவிற்கு சுமார் 2 லட்சம் பேர் வருகிறார்கள்.  

இந்தியாவின் மிகப் பெரிய ஒட்டகத் திருவிழா என்று இதைக் கூறலாம்.   குதிரைகளும் ஆடு மாடுகளும் கூட இதில் பங்கு பெறுகின்றன என்றாலும் ஒட்டகம் இந்த விழாவின் தனித்தன்மை.  ஒட்டகங்கள் மற்றும் கால்நடைகள் விற்பனை சந்தையாகவும் இது விளங்​குகிறது.  

இந்தத் புஷ்கர் திருவிழாவின்போது நடைபெறும் ஒட்டகப் பந்தயம் பலரையும் ஈர்க்கும் ஒன்று.  தவிர மிக அதிகம் பேரை சுமந்து வரும் ஒட்டகங்களுக்கு தனிப் பரிசு.  அதுவும் பந்தயத்தின்போது அங்கு இசைக்கப்படும் இசையும் பாடப்படும் பாடல்களும் காதுகளுக்கு தனி இன்பம்.  

 ஒட்டகப் பந்தயம்
ஒட்டகப் பந்தயம்

இந்த ஆண்டு வருகிற 1-ம் தேதியில் தொடங்கி, 10-ம் தேதி வரை நடைபெறும் புஷ்கர் திருவிழாவில், ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆமாம்.. இந்த ஆண்டுத் திருவிழாவில் ஒட்டகங்கள் பங்கேற்பு கிடையாது!  இப்படித் தீர்மாளித்திருக்கிறது அந்தப் பகுதியின் நீதிமன்றம்.  மற்ற கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் என்றாலும் கால்நடைகள் தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் இம்முறை நடைபெறாது என்ற தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறார் நீதிபதி​. 

இது பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி.  புஷ்கர் விழாவில் பங்குபெற திட்டமிட்டிருந்த பல வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கூட இதில் கடும் ஏமாற்றம்.  

ஒட்டகங்கள் போன்ற விலங்குகள் விற்பனை மற்றும் பங்கேற்பு எதுவுமில்லாமல் இந்த விழா நடைபெறும் என்ற அறிவிப்பு அம்மாநிலத்தில் பெரும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   வாணவேடிக்கையில்லாத தீபாவளி, சூரிய வழிபாடு இல்லாத பொங்கல் என்பதை இந்த அறிவிப்பு நினைவுபடுத்துவதாக அந்தப் பகுதி மக்கள்  கருதுகிறார்கள்.  

புஷ்கர் திருவிழா என்பது விலங்குகளின் பிரம்மாண்டமான விற்பனை சந்தையாக இது விளங்குகிறது.  பின் ஏன் இந்தத் தடை? 

இம்முறை மேற்படி விலங்குகளுக்கு இடையே பரவியுள்ள ஒருவகை நோய்தான் இந்த அறிவிப்புக்கு காரணம்.  இதை லம்ப்பி நோய் என்கிறார்கள்.   இது என்ன புதுவகை நோய்?  

ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் போன்ற பகுதிகளில் பரவி வரும் கொடூரமான ஒரு வைரஸ் நோய்தான் இது.  இதன் காரணமாக விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம். அவற்றின் மூலம் பெறப்படும் பால் உற்பத்தி கணிசமாகக் குறைந்து விட்டதால் வருமானமும் படுத்துவிட்டது.  

இது ஒரு வகைத் தோல் நோய்.  கேப்ரிபாக்ஸ் என்ற வைரஸ்,  கொசுக்கள் மற்றும் வேறு சில உயிரினங்கள் மூலம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் ரத்தத்தில் கலந்துவிடுகிறது.  இந்த நோயின் வெளிப்பாடு பெரும்பாலும் தோல் பகுதி மற்றும் தோலுக்கு அடிப்பகுதியில் தெரியவருகிறது. 

இதனால் ஆங்காங்கே தோலில் பெரிதும் சிறிதுமாக வீக்கங்கள் ஏற்படுகின்றன.  பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு கடும் காய்ச்சல் உண்டாகிறது.  அவை பால் சுரப்பது கணிசமாக குறைந்து விடுகிறது. 

உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது இறப்பிலும் கொண்டுவிடலாம்.  நல்லவேளையாக இது மனிதர்களுக்கு பரவுவதில்லை என்று ஆறுதல் பட்டாலும் கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு இது பலத்த அடியாக இருக்கிறது.  

 ஒட்டகம்
ஒட்டகம்

 அதுவும் புஷ்கர் விழா கால்நடை சந்தையில் ஏராளமான விலங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பலர் காத்திருப்பார்கள்.  அதனால் இந்த வைரல் நோய் விலங்குகளுக்குப் பரவக் கூடும் என்பதால்தான் இந்த ஆண்டு ஒட்டகம் உட்பட விலங்குகள் பங்குபெற தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஒட்டகங்களுடன் கூடிய இந்த கலர்புல் திருவிழாவைக் காண வருவதற்காக ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்தவர்களில் கணிசமானவர்கள் இப்போது அவற்றை ரத்து செய்து விட்டதாக ஹோட்டல் அதிபர்கள் புலம்புகிறார்கள்.  கைவினைக் கலைஞர்களுக்கும் சோகம்.  அவர்கள் உருவாக்கங்களுக்கு டிமாண்ட் என்பது புஷ்கர் திருவிழாவில் நடைபெறும்.  

அடுத்த ஆண்டாவது பாலைவனக் கப்பல்களின் அணிவகுப்பு புஷ்கரில் நடக்கட்டும். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com