கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர் சிலைக்கு நீதிமன்றம் தடை!

கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர் சிலைக்கு நீதிமன்றம் தடை!

மறைந்த ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு சினிமா உலகின் அன்றைய சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா தெலங்கானாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான கம்மம் நகரத்தில் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் என்.டி.ஆருக்கு ஒரு பிரம்மாண்டமான சிலையை நிறுவுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்து வரும் 28ஆம் தேதி திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் உள்ளது. சிலைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலமாக சர்வதேசப் புகழ் பெற்ற ஜூனியர் என்.டி.ஆர்.

கம்மம் நகரத்தின் ஏரிக்கரைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள என்.டி.ஆரின் சிலை 54 அடி உயரம் கொண்டது. அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பலரும் அளித்த இரண்டு கோடியே முப்பது லட்சம் ரூபாய் நன்கொடையில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. நிஜாமாபாத் நகரச் சேர்ந்த வர்மா என்ற சிற்பி இந்தச் சிலையை உருவாக்கி இருக்கிறார்.

ஆனால், அந்தச் சிலை நிறுவுவதற்கு ஒரு சாரர் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து, சிலைக்குத் தடை கோரி தெலங்கானா உயர்நீதி மன்றத்தினை அணுகினார்கள். சர்ச்சைக்குக் காரணம், நூற்றாண்டு விழா நாயகரான என்.டி.ஆருக்கு சிலை வைக்கக் கூடாது என்பதல்ல. அந்தச் சிலை, 1967ல் என்.டி.ஆர். நடித்து வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற திரைப்படமான கிருஷ்ணாவதாரம் என்ற திரைப்படத்தில் என்.டி.ஆர். ஏற்று நடித்த கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர். சிலை என்பதில்தான்.

யாதவ சங்கம், இஸ்கான் உள்ளிட்ட சில அமைப்புகள்தான் கிருஷ்ணாவதார என்.டி.ஆர். சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்தை அணுகினார்கள். என்.டி.ஆர். கிருஷ்ணர் வேடத்தில் தோன்றி மக்களைக் கவர்ந்தார் என்றாலும், கிருஷ்ணாவதாரத் தோற்றத்தில் அவரது சிலையை வைப்பது, கிருஷ்ண பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் என்பது அவர்கள் தரப்பு வாதம்.

தெலங்கானா உயர் நீதி மன்றம் கிருஷ்னாவதார என்.டி.ஆர். சிலைக்கு விதித்த தடையை ஏற்று, சிலை நிர்மாணக் குழுவினர், “ கிருஷ்ணரின் கருநீல நிறத்துக்கு பதிலாக தங்க நிறத்தில் சிலை இருக்கும். மேலும், கிருஷ்ணருகு உரிய விஷ்ணு சக்கரம் போன்ற அம்சங்கள் நீக்கப் படும். , திட்டமிட்டபடி மே மாதம் 28 ஆம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறும்!” என அறிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com