’மக்கள் மனக்குரலைக் கேட்கத் தெரிந்த பிரதமருக்கு எங்கள் மனக்குரலை கேட்கத் தெரியாதா?’ மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்!

’மக்கள் மனக்குரலைக் கேட்கத் தெரிந்த பிரதமருக்கு எங்கள் மனக்குரலை கேட்கத் தெரியாதா?’ மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்!

ந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்து வருகிறார். பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் குற்றம் சுமத்தி வந்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்திய மல்யுத்த வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான, ’மனதின் குரல்’ வரும் ஞாயிறு அன்று ஒலிபரப்பாக உள்ளது. இது 100வது மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், இதனைப் பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனக்குரலையும் கேட்கிறீர்கள். எங்களின் மனக்குரலை உங்களால் கேட்க முடியாதா?

நாங்கள் பதக்கம் வென்றால் எங்களை அழைத்து உங்களின் இல்லத்தில் மரியாதை செய்கிறீர்கள். எங்களை உங்களின் மகள்கள் என்று அழைக்கிறீர்கள். தற்போது, ’எங்கள் மனதின் குரலையும் கேளுங்கள்’ என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களைச் சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிக்க விரும்புகிறோம். எங்களைச் சந்திக்க நீங்கள் முன்வர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும், ’எங்களின் போராட்டம் இன்னும் பிரதமர் மோடிக்கு எட்டவில்லை என்றே கருதுகிறோம்’ எனத் தெரிவித்திருக்கும் சாக்சி மாலிக், ’அவரை நாங்கள் சந்தித்தால் , அவரால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்’ எனக் கூறி உள்ளார். மேலும், ’கடந்த நான்கு நாட்களாக ஜந்தர் மந்தரில் கொசுக்கடிக்கு மத்தியில் நாங்கள் சாலையிலேயே உறங்குகிறோம்.  ஸ்மிருதி இரானி ஏன் அமைதி காக்கிறார் என்பது தெரியவில்லை. நீங்கள் இங்கு வர வேண்டும். நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என சாக்சி மாலிக் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com