இமாசலப் பிரதேசம் : ஜெயிக்கப்போவது யாரு?

இமாசலப் பிரதேசம் : ஜெயிக்கப்போவது யாரு?

றுபத்தெட்டு இடங்கள் கொண்ட இமாசலப் பிரதேச சட்டமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கடந்த முறை  43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறையும் மெஜாரிடி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

ஆனால், பா.ஜ.க. தரப்பு உற்சாகமாகவே உள்ளது. காரணம்,  பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின்  சொந்த மாநிலம் இது. எனவே,  இந்தத் தேர்தல் அவருக்கு ஒரு தன்மானப் பிரச்னை.  

ஜே.பி.நட்டா பல கிராமங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.  

பிரதமர் மோடியும் ஒரு சில பேரணிகளில் பங்கேற்றதுடன், சில தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த போட்டி வேட்பாளர்களுக்கு டெலிபோன் செய்து, வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி சொன்னார்.

உள்ளூர் தலைவர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டார்கள். இப்படி பா.ஜ.க. தரப்பில் தலை முதல் வால் வரை அனைவரும் உற்சாகமாக உழைக்க, காங்கிரஸ் தரப்பில் இதற்கு நேர் எதிர்.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இமாசலப் பிரதேசத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.  தேர்தலுக்கு முன்பாக பிரியங்கா மாநிலத்தில் முகாமிட்டு, பிரசாரம் செய்தாலும், “மாநிலத்தில் 68 தொகுதிகளுக்கும் செல்ல முடியாது” என்று சொல்லிவிட்டார்.

அவருக்கு வசதியாக இழுபறியான தொகுதிகள் என்று ஒரு பட்டியல் போட்டு அவரிடம் கொடுத்தார்கள். அதில் 40 தொகுதிகள்  இருந்தன. ஆனால்,  பிரியங்கா  பத்துப் பன்னிரெண்டு மாவட்டங்களில் பேரணிகளுக்கு வர ஒப்புக்கொண்டார்.

 கடைசியில் அதுவும் இல்லாமல்,  நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் மட்டுமே கலந்துகொண்டு பேசினார்.

மொத்தத்தில் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி நொந்து போய்விட்டார்கள். “பா.ஜ.க.வில் தலைவர்கள், கட்சிக்காக பணியாற்றுகிறார்கள்; காங்கிரசிலோ, கட்சிக்காரர்கள் தலைவர்களுக்காக பணியாற்ற வேண்டியுள்ளது; அப்படியும் கூட தலைவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை” என்று வெறுத்துப் போய் பேசுகிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com